எமர்ஜென்சி கதவு திறந்த விவகாரம்: விமான போக்குவரத்து அமைச்சர் விளக்கம்| Emergency Door Open Issue: Aviation Minister Explanation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தவறுதலாகவே எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டதாகவும், இதற்காக கர்நாடகா பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரியுள்ளதாகவும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த மாதம் 10ம் தேதி இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கர்நாடக மாநில பா.ஜ., எம்.பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவசர கால கதவு திறக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. அதே விமானத்தில் பயணம் செய்த தி.மு.க பேச்சாளர் அரசகுமார் இந்த தகவலை பகிர்ந்தார்.

latest tamil news

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் விமானத்தின் அவசரகால கதவு திறந்த விவகாரத்தை பதிவிட்டு விமர்சித்து இருந்தனர்.

இந்நிலையில் இதுபற்றி இண்டிகோ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயணி ஒருவர், அவசரகால வெளியேறும் கதவைத் திறந்திருக்கிறார். அவரின் இந்தச் செய்கையால், மற்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனடியாகப் பயணி மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் விமானத்தின் அழுத்தத்தைச் சரிபார்த்தனர். அதன் பிறகு, விமானம் தாமதமாகப் புறப்பட்டது’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால் அந்த அறிக்கையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தனிப்பட்ட யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதற்கும் கர்நாடக காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘தவறுதலாகவே எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தவுடன் தேஜஸ்வி சூர்யாவே விமானி மற்றும் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரிவிட்டார். உரிய சோதனைக்கு பிறகு விமானம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது’ எனக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.