ஈரோடு இடைத்தேர்தல்: "திமுக-வின் எதிர்மறை ஓட்டுகள், எங்களுக்குச் சாதகமாக அமையும்”- ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, காலியாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

ஜெயக்குமார் – ஜி.கே.வாசன்

இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமாக தலைவர் ஜி.கே.வாசனை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், “அ.தி.மு.க-வோடு த.மா.க சுமுகமான உறவு வைத்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் என்பது முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளரை நேரடியாக அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்.

தமிழக அரசியல் சூழல், மத்தியில் இருக்கும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினோம். நேற்று தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன். இன்றைக்கு அ.தி.மு.க-வினுடைய மூத்த தலைவர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். எங்களின் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க, த.மா.க, பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக்கூடாது. அதற்கேற்றவாறு மாநிலத்தில் மக்கள் மனநிலையைப் பிரதிபலிக்காத ஆட்சியாளர்களாக தி.மு.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயக்குமார் – ஜி.கே.வாசன்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இன்று தி.மு.க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்மறை வாக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இதெல்லாம் எங்கள் கூட்டணிக்கு தேர்தலில் சாதகமாகத் அமையும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இதனை வைத்து ஒத்த கருத்தோடு ஓரிரு நாள்களில் அதிகாரபூர்வமாக எங்களுடைய கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம். கடந்த முறை நாங்கள் தான் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் எங்களுடைய வெற்றி வருங்கால தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும்.

இதனடிப்படையில் வியூகங்கள் செய்து நிச்சயமாக வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய நிலையைக் கூட்டணி தலைவர்கள் ஏற்படுத்துவோம். அது எங்களுடைய கடமையாக இருக்கிறது. த.மா.க, கூட்டணியின் மிக முக்கியமான கட்சி. எங்களுடைய முடிவு வெற்றிக்கான ஒத்த கருத்துடைய முடிவு. அந்த முடிவையே நாங்கள் ஒருசேர எடுப்போம். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு குறைந்த மாதங்களிலேயே அதிக அளவில் மக்களின் அவநம்பிக்கையைப் பெற்ற ஆட்சியாளர்களாக இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக இந்த ஆட்சிக்கு எதிர்மறை ஒட்டு நாளுக்கு நாள், மணிக்கு மணி கூடிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை” என்று கூறினார்.

ஜெயக்குமார் – ஜி.கே.வாசன்

அவரைத்தொடர்ந்து தேர்தலில் கூட்டணி கட்சியின் வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “கூட்டணி கட்சியின் தலைவர்கள் வேட்பாளரை முடிவு செய்த பிறகு அடுத்ததாக இந்த கேள்விக்கு வர முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.