புதுடெல்லி: திரிபுரா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு வியூகம் வகுக்கும் பணியை பாஜ இப்போதே தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் சவால் விடும் வகையில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா,மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இது பற்றி தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘பிப்.16-ல் தேர்தல் நடக்க உள்ள திரிபுராவில் வேட்புமனு தாக்கல் வரும் 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. 31-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுவை வாபஸ் பெற பிப்.2-ம் தேதி கடைசி நாள். அதேபோல, பிப்.27-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள மேகாலயா, நாகாலாந்தில் வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்.7-ம் தேதி முடிவடைகிறது.
பிப்.8-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தேர்வுகள், பாதுகாப்பு படைகளை அனுப்புதல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தற்போது திரிபுரா மாநிலத்தில் பாஜ ஆட்சியில் உள்ளது. மேகாலயாவில் பாஜவுடன் கூட்டணியில் உள்ள என்பிபி கட்சியின் கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார்.
நாகாலாந்தில் பாஜவுடன் கூட்டணியில் உள்ள என்டிபிபி கட்சியின் நெப்யூ ரியோ முதல்வராக உள்ளார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பலமாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் பாஜ வெற்றி பெறுமா அல்லது எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் வெல்லுமா என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இந்த மாநிலங்களின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பாஜ பல்வேறு வியூகங்களையும் வகுத்துள்ளது.