ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் பாசனமாக விளங்கிவரும் காலிங்கராயன் வாய்க்கால். பாண்டிய மன்னனின் தளபதியாக விளங்கிய காலிங்கராயனரால் கி.பி 1282ம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும். அதிகப்படியான பவாணியாற்று வெல்ல நீரை அணைகட்டி மேடான பகுதிக்கு தண்ணீரை திருப்பி நொய்யல் ஆற்றுடன் இணைக்க காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டு பாசனத்திற்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறக்கப்பட்ட தினம் இன்று.
காலப்போக்கில் தொழில் வளர்ச்சி, நகர மயமாதல் போன்ற காலத்தின் சூழல் காலிங்கராயன் கால்வாயையும் விட்டுவைக்கவில்லை. பவானி நதியிலிருந்து தூய்மையான தண்ணீர் காலிங்கராயன் கால்வாயில் பாய்ந்தாலும் வழியில் சாய ஆலை கழிவுகளால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் அள்ளி பருகிய இந்த தண்ணீரை தற்போது கால் நனைக்கவே தயங்குவதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
காலிங்கராயன் கால்வாய் மூலம் ஈரோடு மாநகராட்சியில் 19 பேரூராட்சிகள் மற்றும் 44 கிராம ஊராட்சிகளில் நேரடியாக 15,743 ஏக்கரும் மறைமுகமாக 10,000ஏக்கருக்கு பாசனம் பெறுகின்றன. இதனால் இந்த கால்வாயை தெய்வமாக போற்றி வணங்கும் விவசாய குடும்பங்கள் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணித்த இந்த நாளை காலிங்கராயன் தினமாக கொண்டாடுகின்றனர். பல தலைமுறைகளாக 1000 கணக்கான விவசாயிகள் காலிங்கராயன் கால்வாய் மூலம் வாழ்வில் ஏற்றமும், பொருளாதாரத்தில் மாற்றமும் கண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் மஞ்சளும், கரும்பும், வாழையும் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. 740 ஆண்டுகளை கடந்து இன்றும் செவ்வனே தண்ணீர் சுமந்து விவசாயிகளுக்கு வாழ்வளித்து வரும் இந்த கால்வாயில் நிலைத்து நிற்கிறது இந்த காலிங்கராயனின் பெயரும், சிறப்பும். பாரம்பரிய மிக்க இந்த கால்வாயை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது இந்நாளில் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.