பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த பிரையண்ட் நகரை சேர்ந்த வீரபாகு என்பவர் தீவிர அஜித் ரசிகராக இருந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கோல்டன்புரத்தில் உள்ள கே.எஸ்.பி.எஸ் திரையரங்கிற்கு துணிவு படம் பார்க்க சென்றுள்ளார்.
அப்பொழுது வீரபாகு மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் வீரபாகுவை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்ததுடன் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் மட்டும் துணிவு படத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொந்த குடும்பத்தினர் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்டதால் மனம் உடைந்த வீரபாகு அங்கிருந்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அவமானத்தின் விரக்தியில் இருந்த வீரபாகு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.