டெல்லி: வடஇந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடஇந்தியாவில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் 8 முறை குளிர் அலை வீசி உள்ளது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குளிர்கால விடுமுறைக்கு பின் ஜனவரி 16-ம் தேதி திறந்த பள்ளிகளுக்கு குளிர் அலை காரணமாக மீண்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் இன்று காலை -11.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. ராஜஸ்தானின் சிகார், சுரூ ஆகிய மாவட்டங்களில் இன்று காலை உறை பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக -2.2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. பஞ்சாப், ஹரியானாவிலும் வழக்கத்தை இடவும் வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் இன்று காலை அதிகபட்ச பனிப்பொழிவு காணப்பட்டது. இதனிடையே வடஇந்திய பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் 8 அதிவிரைவு ரயில்கள் உள்ளிட்ட 16 ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.