“ஓபிஎஸ் அணி திமுக-வின் `பி டீம்'!" – ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தாக்கு

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டியில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க-வின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில், “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தும், நம் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பொங்கல் பரிசாக அ.தி.மு.க ஆட்சியில் ரூ.2,500 கொடுத்தபோது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 தருவோம்’ என்றார் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி

ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் ரூ.1,000 மட்டுமே கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் விரைவில் 100 யூனிட் இலவச மின்சார மானியத்தையும் தி.மு.க அரசு ரத்து செய்யப்போகிறது. அடித்தட்டு மக்களைப் பற்றி எந்தக் கவலையும்படாமல் அ.தி.மு.க அரசு மக்களுக்குக் கொடுத்துவந்த பல்வேறு சலுகைகளையும் பறித்துக்கொண்டதால், மக்கள் தி.மு.க மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதை அறிந்துதான் இந்தத் தொகுதியில் தி.மு.க போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டது. இந்த முறை கிழக்குத் தொகுதியில் நாம் பெறப்போகும் வெற்றியானது தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையப்போகிறது” என்றார்.

த.மா.கா மாநில இளைஞரணிச் செயலாளர் யுவராஜா பேசுகையில், “கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து த.மா.கா சார்பில் நான் போட்டியிட்டபோது 59,000 வாக்குகளைப் பெற்றேன். இந்த வாக்குகள் இங்கிருக்கும் அ.தி.மு.க-வினரின் வியர்வையில் கிடைத்தவை. இந்த இடைத்தேர்தலில் நம்முடைய கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது மக்களை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க திரளாக அழைத்து வர வேண்டியதுதான். கடந்த தேர்தலில் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் 75% வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினார்கள். அதேபோன்று மற்றப் பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் அழைத்துவந்து அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் செய்தால் நாம் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், “நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் (ஓ.பி.எஸ்) தி.மு.க-வின் பி டீமாக செயல்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்பது நோக்கமல்ல. தி.மு.க சொல்படி நடக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். இங்கு திரண்டு வந்திருப்பவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் வழிவந்த அ.தி.மு.க-வினர்.

செங்கோட்டையன்

கடந்த தேர்தலில் நாம் வென்றுவிடுவோம் என்று அதீத நம்பிக்கை கொண்டிருந்ததால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். அதனால் நம்முடைய வெற்றி நம் கையை விட்டுச் சென்றது. கடந்த தேர்தலில் ஆரம்பத்தில் 150 தொகுதிகளில் அ.தி.மு.க-தான் முன்னணியில் இருந்தது. கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதால் தோல்வியைத் தழுவினோம். நாம் சற்று கவனக்குறைவாக இருந்ததால் அந்த வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்போது சோதனையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதை சாதனையாக மாற்ற வேண்டும். தற்போதைய சூழலில் ஒற்றைத் தலைமை இருந்தால்தான் தி.மு.க-வை வீழ்த்த முடியும் என்று கருதி ஓ.பி.எஸ்ஸிடம் பேசிப் பார்த்தோம்.

ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, நாம் அவர்களைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் கெட்டப்பெயரை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். வீடு, வீடாகச் சென்று நம்முடைய வாக்காளர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்து நம்முடைய வாக்குகளைப் பதிவுசெய்ய வைப்பதுதான் அ.தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். பிப்ரவரி 27-ல் தேர்தல் நடப்பதால் இரண்டு நாள்களுக்கு முன்பே எங்களைப் போன்ற வெளியூர்காரர்களை தேர்தல் ஆணையம் வெளியேற்றிவிடும்.

அந்த சமயத்தில்தான் ஆளுங்கட்சியினர் நிலைமையை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அந்த சமயத்தில் அ.தி.மு.க-வினர் விழிப்போடு பணியாற்ற வேண்டியது கட்டாயம். முக்கியமாக தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க வேண்டும். வீடு, வீடாகச் சென்று தி.மு.க ஆட்சியின் அவலத்தை எடுத்துக்கூறி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாகவே வாக்காளர்களில் 20 சதவிகிதம் பேர் வெளியூர்களில் பணிபுரிபவர்களாகவும், படிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

கூட்டம்

வாக்காளர் பட்டியல் மூலம் அவர்களைக் கண்டறிந்து, வரவழைத்து வாக்களிக்கச் செய்ய வேண்டும். இந்த 20 சதவிகித வாக்காளர்களை நமக்கு வாக்களிக்கச் செய்தால் கட்டாயம் அ.தி.மு.க வெற்றிபெறும். தற்போதைய சூழலில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கின்றனர். கரூரிலிருந்து வரும் ஒருவர் தி.மு.க-வினருக்குச் சேர வேண்டிய பங்குத்தொகையை அபகரித்துக்கொள்வதாக அந்தக் கட்சியின் பிரமுகர்களே புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் ஒவ்வோர் அ.தி.மு.க-வினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் நாம் வெற்றிபெற்று விடுவோம்” என்றார்.

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், “ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்று, இந்தத் தொகுதி அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் பெறும் வெற்றியானது, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைய வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.