கதிஹார்: பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது இரண்டாவது முறையாக கல் வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தின் நியூ ஜால்பாய்குரி முதல் ஹவுரா வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கதிஹார் மாவட்டத்தின் வழியாக ரயில் சென்றபோது மர்மநபர்கள் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டல்கோலா மற்றும் டெல்டா ரயில் நிலையங்களுக்கு இடையே கல் வீசப்பட்டதாக சம்பந்தப்பட்ட பெட்டியில் பயணம் செய்த பயணி புகார் செய்துள்ளார். கல் வீச்சில் ஜன்னலின் கண்ணாடிகள் விரிசல் அடைந்திருந்தது. முன்னதாக கடந்த 3ம் தேதி கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் வந்தே பாரத் மீது கல்வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக வந்தே பாரத் மீது கல் வீசப்பட்டுள்ளது.