சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை என்ற ஒரு துறையே இருக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறையை கண்டித்தும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க கோரியும் தமிழக பாஜகவின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மாலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை முடித்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
பக்தர்கள் காணிக்கையாக போடும் உண்டியல் பணத்தை எடுத்து அதிகாரிகளின் உணவு செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, பல்வேறு பணிகளுக்கு அரசு செலவு செய்யாமல், கோயில் உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்துள்ளனர்.
கோயில் பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா என்பதற்காக தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், தணிக்கை செய்வதற்கான செலவையே அதிகமாக பெற்றுள்ளனர். அந்தவகையில் 2018-19-ம் ஆண்டில் அரசு கோயில்களில் தணிக்கை செய்தததற்காக ரூ.19 கோடியும், 2019-20-ல் ரூ.20 கோடியும், 2020-21-ல் ரூ.21 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு தணிக்கை செலவு என கோயில்களின் இருந்து 2018-19-ல் ரூ.92 கோடி, 2019-20-ல் ரூ.87 கோடி, 2020-21-ல் ரூ.70 கோடி பெற்றுள்ளது. தணிக்கைக்கு ஆன செலவை விட 4 மடங்கு அதிகமான பணத்தை கோயில்களில் இருந்து எடுத்துள்ளனர்.
தமிழகத்துக்கு தேவையில்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது. தமிழக கோயில்களில் இருந்து ரூ.1,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஆனால், வெறும் ரூ.100 கோடி அளவில் தான் தமிழக அரசு வருமானத்தை காட்டுகிறது. இதற்கு ஒரே முடிவு கோயில்களின் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும்.
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும். தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், கோயில் சம்பந்தப்பட்ட பொருட்கள் மட்டும் 50 ஆயிரத்தை தாண்டும் என 1989-ல் யுனெஸ்கோ கூறியது. தற்போது வரை தமிழகம் மீட்டெடுத்த சிலை மற்றும் பொருட்கள் வெறும் 241 மட்டும் தான். மோடி ஆட்சியில் மட்டும் 228 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 முறை ஆட்சியில் இருந்த திமுக ஒரு சிலையையாவது மீட்டு கொண்டுவந்ததற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.