காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு அளித்தால் இடைத்தேர்தலில் எனது இளைய மகனை நிறுத்துவேன் – ஈவிகேஎஸ்.இளங்கோவன் தகவல்

சென்னை: காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு அளித்தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எனது இளைய மகனை போட்டியிடச் செய்வேன் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸுக்கு வாய்ப்பு அளித்தமைக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவினர் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கை சின்னத்துக்கு ஆதரவு கோரி மக்களை சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ்காரன் என்ற முறையில் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் போட்டியிடவில்லை: காங்கிரஸ் வேட்பாளரை ஓரிரு நாட்களில் கட்சித் தலைமை அறிவிக்கும். தேர்தலில் நான் போட்டி யிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்.

எனது குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிட வேண்டும் என்று கூறினால், எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தேசிய தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். எனினும், இன்னும் சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவெடுக்கும். எந்த முடிவை எடுத்தாலும், நாங்கள் அதற்கு ஆதரவு தருவோம்.

அதிமுக நான்காகப் பிரிந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமைஇல்லை. குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் சேர்ந்தே தேர்தலை சந்தித்தாலும் காங்கிரஸ் பெரியவெற்றியைப் பெறும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், கட்சி வலுவாக உள்ளது. திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் பல சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். பொறுப்பேற்ற நாள் முதல் ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் உழைத்து வருகிறார். மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

வெற்றி உறுதி: மத்திய அரசு தமிழகத்துக்கு கேடு செய்ய நினைக்கும்போதும், இந்தியைத் திணிக்க முயற்சிக்கும்போதும், தமிழகத்தை கொச்சைப்படுத்தும்போது சிறந்த போர் வீரராக எழுந்து நிற்கக்கூடியவர் ஸ்டாலின்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை ஸ்டாலின் கண்டித்தது போன்ற செயல்பாடுகள், அவருக்கும், திமுகவுக்கும் மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.