ஜவுளி மாநகரில் குளிர்காலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பணி: பலமுனை போட்டிக்கு தயாராகும் கட்சிகள்

ஜவுளிக்கு பெயர் போன ஈரோடு கிழக்கு தொகுதி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் சிறிய தொகுதி. கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது புதியதாக இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் இதுவரை 3 தேர்தல்களை சந்தித்து உள்ளது. 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், திமுகவும் மோதியது. இதில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், அதிமுக சார்பில் தென்னரசு ஆகியோர் போட்டியிட்டதில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார்.  2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா ஆகியோர் போட்டியிட்டதில் திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு மாநகர பகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம், பி.பெ. அக்ரஹாரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், அசோகபுரம் ஆகிய பகுதிகள் முக்கிய இடங்களாகும். தொகுதியில் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்திராநகர், மாதவகிருஷ்ணாவீதி, மோசிக்கீரனார் வீதி, அக்ரஹார வீதி உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக இருந்த இத்தொகுதியில் கடந்த ஒன்றரை காலத்தில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக கொரோனா காலத்தில் மக்களுக்கான தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டது. மாணவர்கள், இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு பயிற்சி மைய கட்டிடம் கருங்கல்பாளையம் காமராஜர் அரசு பள்ளியில் ₹6 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கருங்கல்பாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில், இணைப்பு சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு திட்டத்தை நிறைவேற்ற வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் சுமார் 3,000 குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு பல்வேறு காரணங்களால் பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற திருமகன் ஈவெரா பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் பல்வேறு திட்ட பணிகளால் சேதமடைந்த 100க்கும் மேற்பட்ட தார் சாலைகள் ₹13 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் தேவைப்படும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தொகுதியில் கழிவு நீர் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்த இடங்கள் கண்டறிந்து கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் செல்ல வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா தனிப்பட்ட முறையில் பல்வேறு உதவிகளை செய்தது,  மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் செயல்பட்டது என தொகுதி மக்களின் மனதில் இன்றைக்கும் திருமகன் ஈவெரா ஜொலித்து வருகிறார். இந்த சூழலில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் தமாகா போட்டியிட்ட நிலையில் தற்போது தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் அதிமுக போட்டியிடுகிறது. ஆனால், அதிமுகவில் அதிகார சண்டையால் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் போட்டியிட உள்ளதால், வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இது தவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர்.

பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், அதிமுக எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கிடையேதான் நேரடியான போட்டி நிலவும் சூழல் தொகுதியில் உள்ளது.  பலமுனை போட்டி கட்சிகள் தயாராகி வருவதால்,  குளிர்காலத்தில் ஜவுளி விற்பனையில் பிசியாக இருக்கும் ஜவுளி மாநகரத்தில் தேர்தல் பணிகள் அனல் பறக்கிறது. திமுக அரசின் கடந்த ஒன்றரை ஆண்டுகால திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் செயல்பாடுகள், அணுகுமுறைகள், திட்டங்கள் ஆகியவை காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவில் இரண்டு அணிகளாக இருப்பதும் பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

2.26 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயரத்து 140. மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.