கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளைப்பகுதியை சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி ரதீஷ்(50). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரதிஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் உஷா தனது மகள்களுடன் பிரிந்து, மணலிக்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார். இதையடுத்து ரதீஷ் மனவேதனையில் அதிகமாக மது அருந்தி வந்தார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.