நெல்லை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் நெல்லை, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரப் பகுதிகளில் 40 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 30 சதவிதம் குறைவாகவே பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பவில்லை.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு நான்கு நாட்கள் இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனிடையே நேற்றிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது.

அதிகபட்சமாக காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய மலைப் பகுதிகளில் 4 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பதிவானது. மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, கன்னடியன், அம்பாசமுத்திரம் , ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக மாவட்டத்தில் உள்ள நெல்லை மாநகரப் பகுதிகளான சந்திப்பு, கொக்கிரகுளம், பாளையங்கோட்டை, கே டி சி நகர் வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இடைவிடாமல் 40 நிமிடங்கள் இந்த மழை பொழிவு நீடித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் காக்காச்சி (திருநெல்வேலி) 5, நாலுமுக்கு (திருநெல்வேலி) 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆயிக்குடி (தென்காசி), தலா 2,

தென்காசி, பாபநாசம் (திருநெல்வேலி), வத்திராயிருப்பு (விருதுநகர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), சிவகிரி (தென்காசி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.

கடந்த சில நாட்களாக பகல் பொழுதில் அதிகமான வெயில் இரவு நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு இருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. இந்த மழை மேலும் சில நாட்கள் நீடிக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.