சென்னை: மின்சார மானியத்தை பொதுமக்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள 2.34 கோடி வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரைஇலவசமாகவும், 500 யூனிட் வரை மானியவிலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 9.75 லட்சம் குடிசைவீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால், மின்வாரியத்துக்கு ரூ.450 கோடி செலவாகிறது. இதன்படி, இலவச மற்றும் மானிய விலைமின்சாரத்துக்காக நடப்பு நிதி ஆண்டில் வீடுகளுக்கு ரூ.5,284 கோடியும், குடிசைவீடுகளுக்கு ரூ.288 கோடியும் செலவாகியுள்ளது. இத்தொகையை மின்வாரியத்துக்கு தமிழக அரசு வழங்கும்.
மின்வாரியம் வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொழிலதிபர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவசதி படைத்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரம், மின்வாரியத்தின் கடன் ரூ.1.59 லட்சம் கோடியாக உள்ளதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ‘மின்சார மானியம் மற்றும் இலவச மின்சாரம் வேண்டாம்’ என்று மக்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கும் மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இலவச மின்சாரம் மற்றும் மின்சார மானியத்தை மக்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டத்தை தொடங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவ தற்கான அடிப்படை பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும்’’ என்றனர்.