புதுடெல்லி: ‘சுருக்கு மடி வலையை 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீனவர்கள் பயன்படுத்தலாம்’ என்று இடைக்கால அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என உத்தரவிட்டுள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துபவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஞானசேகர் என்பவர் உட்பட ஒன்பது பேர் தமிழகத்தில் சுருக்கு மடிப்பு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும். மேலும் கடலில் 12 கடல் மைல் தூரத்துக்கு அப்பால் சுருக்கு மடி வலையையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் குமணன் ஆகியோர் வாதத்தில், ‘‘சுருக்கு மடி வலை சுமார் ஒரு ஹெக்டர் அளவுக்கு பெரியதாகும். வர்த்தக ரீதியான மீன் பிடிப்பவர்கள் தான் அதனை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த வகை வலையை கடலில் விரித்து மீன் பிடிக்கும் போது பெரிய வகை மீன்கள் மட்டுமில்லாமல், சின்ன குஞ்சுகளையும் அள்ளிக்கொண்டு வரும். இதனால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமையும். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என தெரிவித்தனர்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,‘‘தமிழக மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு (சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு வெளியே) அப்பால், மீன் பிடிக்க சுருக்கு மடி வலையை எடுத்து சென்று பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் காலை 8மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம். அப்படி செல்லும் இயந்திர படகுகளுக்கு தமிழக அரசு உரிமம் வழங்கியிருக்க வேண்டும். மேலும் படகில் ட்ராக்கிங் சிஸ்டம் (கண்காணிப்பு கருவி) மற்றும் ஜி.பி.எஸ் பொருத்தியிருக்க வேண்டும்.
குறிப்பாக தமிழ்நாடு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மீன் பிடி படகுகள் தரப்பினர் பின்பற்ற வேண்டும். இதனை கடை பிடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறும் மீனவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம். கடலில் 12 கடல் மைலுக்கு உள்ளே சுருக்கு மடி வலையை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லத்தக்க ஒன்றுதான். அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. மேலும் இது இடைக்கால உத்தரவு என்பதால் பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து பின்னர் விரிவாக விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவு பிறப்பித்தனர்.