கடந்த ஆண்டு பஞ்சு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வை சந்தித்தது. அதாவது, 65 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கேண்டி பஞ்சு, சில மாதங்களில் 1.05 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது.
அதுமட்டுமல்லாமல், பருத்தி மற்றும் பஞ்சு வர்த்தகம் வெளிப்படையாகவும், ‘ஆன்லைன்’ மூலமாகவும் நடப்பதால் யார் வேண்டுமானாலும் பருத்தி கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
இந்தாண்டும் பஞ்சு விலை உயரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், அக்டோபர் மாதம் முதல், மூன்று மாதங்களாக பஞ்சு வரத்து குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பருத்தி வரத்து அதிகரித்துள்ளது.
அதாவது, கடந்த 19ந் தேதி 1.17 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி வரத்து 20-ந் தேதி 1.20 லட்சம் பேல்களாக அதிகரித்தது. கடந்த 21-ந்தேதி 1.31 லட்சம் பேல் அளவில் இருந்த பருத்தி நேற்று 1.51 லட்சம் பேல்களாக அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகே பஞ்சு வரத்து அதிகரித்துள்ளதால் இனியும் பஞ்சு விலை உயர வாய்ப்பில்லை என தொழில்துறை நிம்மதி அடைந்துள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் தெரிவித்ததாவது, “சீசன் துவங்கிய மூன்று மாதங்களுக்கு பிறகு, தற்போது பருத்தி வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில், பஞ்சு விலை ஒரு கேண்டி 62 ஆயிரத்து 500 ரூபாயாக இருப்பதால் நூல் விலை உயருவதற்கான வாய்ப்பில்லை. இந்த நம்பிக்கையுடன் புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்வதற்கு நூல் கொள்முதல் ஆர்டர் கொடுத்து வருகிறோம்” என்றுத் தெரிவித்தனர்.