பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம் தமிழில் மொழி பெயர்ப்பு – திருமாவளவன் அதிரடி!

பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழ் மொழி மட்டும் அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் தமிழை மட்டும் கூறவில்லை. தமிழுக்கு மட்டும் நாம் கோரிக்கை விடுக்கவில்லை இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டும்.

பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறை, வெறியாட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவி அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மோடி விலக வேண்டும்.

எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார். வன்முறையை தூண்டி இருக்கிறார். ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கிறது. பிபிசியையும் அவர்கள் அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

ஒரே தேர்தல் ஒரே தேசம் என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். இவையெல்லாம் மிகவும் ஆபத்தான பாசிச அரசியல் என்பதால் தான் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும். சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் ஓங்கி உரத்து முழங்கி வருகிறோம்.

அந்த அடிப்படையில் தான் அந்த கருத்தின் பிரதிநிதியாக இருக்கிற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்ப பெற வேண்டும். அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பது நல்லது அல்ல தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழ்நாட்டுக்கும் முரணாக இருக்கும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஆளுநரின் அழைப்பை புறக்கணிக்கிறோம், அதில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்திருப்பதை வரவேற்கிறோம். பிபிசி வீடியோவை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.