ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் கணினிமயமாக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வகை செய்யும், இணையவழி ஆய்வு மென்பொருள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

ஆங்கிலத்தில் வெளியாகும் தீர்ப்புகளை 99.9% மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடிவதில்லை. உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ, பொதுமக்கள் பேசக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளில் தீர்ப்புகளை வழங்கவில்லை என்றால், நீதித் துறையின் சேவை அர்த்தமற்றதாக ஆகிவிடும்.

எனவே, ஆங்கிலத்தில் வெளியாகும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, வரும் ஆக.15-ம் தேதி முதல் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்புகளை மொழிபெயர்ப்பது தொடர்பான பணிகளை கவனிக்க நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் 2024-ம் ஆண்டு முதல் படிப்படியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.