ஈரோடு இடைத்தேர்தல்: இவர்தான் வேட்பாளர்.. அறிவித்தார் டி.டி.வி.தினகரன்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. அதிமுக சார்பில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக இருப்பதால் யார் போட்டியிடுவார்கள் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது.

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் மூத்த நிர்வாகி பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதேபோல தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவபிரசாத் என்பவரை தங்கள் கட்சி வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அம்மா ஜெயலலிதா – தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்த நிர்வாகிகள் தான் தற்போது எங்கள் கட்சியில் இருக்கிறார்கள்.

எங்களது கட்சி ஓர் கட்டுக்கோப்பான கட்சி. இங்கு 33 வார்டுகளில் நிர்வாகிகளை அமைத்து அவர்கள் சரியாக இயங்கி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் நாங்கள் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ளோம். எங்களது தேர்தல் பணி குழுவை விரைவில் அறிவிப்போம்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அம்மாவின் தொகுதியில் நான் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். அதே நம்பிக்கையோடு இம்முறையும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சில கட்சிகளிடம் நாங்கள் ஆதரவு கேட்டு வருகிறோம். அது பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.