‘எத்தனை நாள் காத்திருந்தோம்’ என்கிறார்கள் கார் ஆர்வலர்கள். ரஜினி ‘வர வேண்டிய நேரத்துல வருவேன்’ என்று பூச்சாண்டி காட்டிவிட்டு, வராமலேயே போய்விட்டார். ஆனால் ஜிம்னி ஒரு படி மேலே! வர வேண்டிய நேரத்தில் இல்லாவிட்டாலும், லேட்டாவாகவாச்சும்…. அதேநேரம் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்திலும் வந்துவிட்டது. இங்கே நாம் சொல்வது மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஜிம்னி காரைப் பற்றி!
போன வாரம் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், பாலிவுட் நடிர் ஷாருக்கானைவிட ஜிம்னிக்குத்தான் அதிகக் கைத்தட்டல்கள். இவ்வளவு எதிர்பார்ப்பு கொண்ட அந்த ஜிம்னியில் முக்கியமான ப்ளஸ்/மைனஸ்கள் என்னனு பார்க்கலாம்!


-
ஜிம்னி என்பது மாருதி சுஸூகி நிறுவனத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு சுத்தமான ஆஃப்ரோடர் கார். இது புத்தம் புது பிராண்ட் கார் என்று சொல்ல முடியாது. இது இந்தியாவுக்குத்தான் புதுசு. ஆனால், ஏற்கெனவே குளோபலாக ஜிம்னி 3 டோர் வெர்ஷனாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அப்படியே கொஞ்சம் வேலைகள் பார்த்து, நம் ஊருக்கு ஏற்றதுபோல், 5 டோர் வெர்ஷனில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
-
3 டோர் வெர்ஷனில் வீல்பேஸை அதிகரித்து, 5 டோர் ஆக்கி, இதை ஒரு சப் 4 மீட்டர் காராக… அதாவது 4 மீட்டருக்குட்பட்ட ஜீப்பாகக் கொண்டு வந்திருக்கிறது. இதன் நீளம்/அகலம்/உயரம் – 3,985/1,645/1,720 மிமீ. ஜிம்னியின் பக்கத்தில் நின்றால், எனக்கே குட்டியாக இருப்பதுபோல் இருக்கிறது. இன்னும் கம்பீரம் வேண்டுமோ!
-
முற்றிலும் க்ளாஸிக் ஸ்டைலில் இருக்கிறது இதன் டிசைன். நிறைய உதாரணங்கள். அந்த உருண்டை வடிவ ஹெட்லைட், அதே உருண்டை இண்டிகேட்டர்கள், செவ்வக வடிவ 5 ஸ்லாட் கொண்ட கிரில் – இவற்றையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு அமெரிக்காவின் ஹம்மர் கார்தான் நினைவுக்கு வந்தது. என்னைப்போலவே ஜிம்னியைப் பார்த்ததும் ஹம்மர் நினைவுக்கு வருபவர்கள், கமென்ட் செய்யுங்கள்! இந்த எல்இடி ஹெட்லைட்டைச் சுத்தம் செய்ய வாஷரும் உண்டு.
-
ஆஃப்ரோடர் என்பதால், கொஞ்சம் முரட்டுத்தன லுக் தெரிய வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் கிளாடிங்குகள் அதிகமாகத் தெரிகின்றன. வீல் ஆர்ச்சுகளுக்கு மேலே, பக்கவாட்டில், பின் பக்கம் என்று அதிகம்! இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் – 210 மிமீ. அதனால், எந்த மேடு பள்ளங்களைப் பற்றியும் கவலை தேவையில்லை. ஆனால், இதன் டயர்கள் 15 இன்ச்தான் இருந்தன. இது காருக்குச் சிறுசுபோல் தெரிகிறது. இதன் செக்ஷன் 195/80 இருந்தது.
-
இந்த பாக்ஸ் டிசைன், இந்த காருக்கு நன்கு பொருந்திப் போகிறது. இதில் பின் பக்கம், தார் மற்றும் கூர்க்கா போல டிக்கியிலேயே ஸ்பேர் வீல் இருப்பது சூப்பர். இதன் டிக்கி கதவு, (Side Opening Door) பின்னால் இழுத்துத் திறக்க வேண்டும். பின் பக்கம் டெயில் லேம்ப்களை பம்பரிலேயே மவுன்ட் செய்திருக்கிறார்கள்.

-
இதன் பின் பக்கக் கதவுகளில் பக்கவாட்டு கிளாஸ் ஹவுஸிங் ரொம்பச் சிறுசாக இருப்பது எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. உள்ளே இருந்து வேடிக்கை பார்ப்பது கஷ்டம். அந்தச் சின்ன குவார்ட்டர் கிளாஸ்தான் விசிபிலிட்டியைத் தடுக்கிறது. ஆனால், சேர்த்து மார்த்து இதன் பின் பக்கம் பெரிய கிளாஸ் ஹவுஸிங் இருப்பது சூப்பர். ஆனால், அதிலும் கால்வாசி ஸ்பேர் வீல் பார்வையை மறைக்கலாம்.
-
இதன் பூட் ஸ்பேஸ் 208 லிட்டர் இருக்கிறது. பின் சீட்டை மடித்தால், 332 லிட்டர் இடவசதி கிடைக்கிறது. இது குறைவுதான்.
-
எல்லா கதவுகளும் லிஃப்ட் டைப் ஹேண்டில்களோடு இருக்கின்றன. புல் டைப் ஹேண்டில்கள் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், தாரில் இருப்பதும் லிஃப்ட் டைப்தான். என்ன, இதில் சன்ரூஃப் கொடுத்திருக்கலாம். கான்ட்ராஸ்ட்டான கறுப்பு நிறத்தில் இதன் கூரை இருந்தது.
-
பொதுவாக, ஆஃப்ரோடர்களுக்கு வீல்பேஸ் குறைவாக இருந்தால்தான்… சட் சட்டென்று பாறைகள், பள்ளங்கள், மேடுகள் மீது புகுந்து புறப்பட முடியும். இதன் வீல்பேஸ் சுமார் 340 மிமீ வரை 3 டோர் வெர்ஷனில் இருந்து அதிகரித்திருக்கிறார்கள். வீல்பேஸ் அதிகரித்தால், இதன் பிரேக்ஓவர் ஆங்கிள் குறையும். குளோபல் மாடலைவிட 4 டிகிரி குறைந்திருக்கிறது. ஆனால், நம் ஊருக்கு இது போதும். ஆனால், நல்ல வேளையாக கிரவுண்ட் கிளியரன்ஸ் அருமை!
-
தார், கூர்க்காவுக்குப் போட்டியாக வருவதால் இதன் அப்ரோச்/பிரேக்ஓவர்/டிப்பார்ச்சர் ஆங்கிள்களில் கவனம் செலுத்தி இருக்கிறது மாருதி. 36/24/50 டிகிரி என்பதுதான் இதன் அளவு. அப்ரோச் என்பது, டமாரென பள்ளத்தில் இறங்கினாலும், காரின் முன் பக்கம் எதிலும் மோதாமல் இருக்க! பிரேக்ஓவர் என்பது பள்ளத்திலிருந்து கீழே இறங்கும்போது, காரின் அடிப்பக்கம் தட்டால் இருக்க! டிப்பார்ச்சர் என்பது காரின் பின் பக்கம் வீலுக்குப் பின்னால் தரைப்பகுதியில் மோதாமல் இருக்க! ஜிம்னி நல்ல ஆஃப்ரோடராகத்தான் இருக்கும்!



-
இதன் உள்பக்க டிசைன் ஆல் பிளாக் தீமில், இங்கேயும் கரடுமுரடாகவே இருக்கிறது. இங்கேயும் சதுர வடிவ அனலோக் கன்சோல், அதற்குள்ளே இரண்டு உருண்டை வடிவ மீட்டர்கள் அருமை. நடுவே MID (Multi Information Display) இருக்கிறது. இதில் பவர் விண்டோ பட்டன்கள் கதவுகளில் இல்லை. சென்டர் கன்சோலில் இருக்கின்றன. இது ஒரு 4 சீட்டர் கார்தான்.
-
இதில் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆர்க்கமிஸ் சரவுண்ட் சிஸ்டம் போன்றவை உண்டு. 6 காற்றுப்பைகள், ESP உடன் ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர்வியூ கேமரா மற்றும் ஏபிஎஸ் உடன் இபிடி போன்ற பாதுகாப்பு வசதிகள் ஜிம்னியில் உண்டு. ஆனால், இதில் பின் பக்கம் டிஸ்க் இல்லாமல் டிரம் பிரேக்ஸ் கொடுத்திருக்கிறீர்களே மாருதி!
-
கிராண்ட் விட்டாராவில் இருக்கும் ‘All Grip Pro’ எனும் 4வீல் டிரைவ் தொழில்நுட்பத்தை இதில் சேர்த்திருக்கிறது மாருதி. மேலும் 2WD-High, 4WD-High, 4WD-Low என எக்ஸ்ட்ரா கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு என்பதால், செமையான ஆஃப்ரோடிங் ஜிம்னியில் பண்ணலாம்.
-
கரடுமுரடான லேடர் ஃப்ரேம் சேஸியில், 3 லிங்க் Rigid ஆக்ஸில் சஸ்பென்ஷன் செட்அப்புடன், எலெக்ட்ரானிக் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் வருகிறது ஜிம்னி. ஆஃப்ரோடின் போது ஸ்லிப் ஆகும் வீல்களுக்கு பிரேக்கிங் அப்ளை செய்து, மற்ற வீல்களுக்கு டார்க்கைப் பகிர்ந்தளிக்கும் அம்சம் இது.
-
இன்ஜினைப் பொருத்தவரை – மற்ற மாருதி கார்கள் K15C சீரிஸ் இன்ஜின்களுக்கு மாறிக் கொண்டிருக்க, இந்த ஜிம்னி K15B சீரிஸ் பழைய இன்ஜினிலேயே வந்திருக்கிறது. இதில் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இருக்கிறது இந்த இன்ஜின். இந்த பெட்ரோல் இன்ஜினின் பவர் 104.8bhp மற்றும் 134Nm டார்க். இதில் டீசல் கிடையாது என்பது மைனஸ். இதன் டேங்க் 40 லிட்டர்.
-
ஜிம்னியின் முக்கியமான ப்ளஸ் பாயின்ட் இதுதான். 4 மீட்டருக்குட்பட்ட கார், 1.5 லிட்டர் இன்ஜின் என்பதால் – சின்ன கார் வரிவிலக்கில் வருகிறது இந்த ஜிம்னி. அதனாலேயே இது 12 லட்சம் எக்ஸ் ஷோரூமுக்குள் இதை பொசிஷன் செய்ய முடிந்திருக்கிறது மாருதியால். இது Zeta (MT/AT), Alpha (MT/AT) என 2 வேரியன்ட்களில் வருகிறது. மாருதியின் நெக்ஸா ஷோரூமில் இதை புக்கிங் செய்து கொள்ளலாம்.