டாஸ்மாக் விற்பனை அதிகரிப்புக்காக அதிகாரிக்கு நற்சான்றிதழா? – 'பரபர' தகவலும், ஆட்சியர் விளக்கமும்!

கரூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் மருத்துவர் பிரபுசங்கர். இவர் தலைமையில், நேற்று காலை 9 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 74-வது குடியுரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. முதலில், மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.

சர்ச்சையான புகைப்படம்

அப்போது, அரசு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், சமூக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் தனிநபர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விருது, நற்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில்தான், இன்று காலை முதல், கரூர் டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட நான்கு பேருக்கு விற்பனை அதிகரிப்புக்காக நற்சான்றிதழ் வழங்கியதாகவும், அதில் ஒரு சான்றிதழ் சமூக வலைதளங்களில் பரவி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அந்தச் சான்றிதழ், மாவட்ட நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆட்சியர்

இது குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் பேசினோம். “இதில் சர்ச்சையாக ஒன்றுமில்லை. முதலில் டாஸ்மாக் நிறுவனம் என்பது, அரசின் ஓர் அங்கம்தான். அந்த துறையில் சிறப்பாகச் செயல்பட்ட ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுவது நடைமுறைதான். மற்ற துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுவது போல், டாஸ்மாக் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்குவது இயல்புதான். அதேபோல், டாஸ்மாக் என்றால், வெறும் மது விற்பது மட்டுமல்ல. கள்ளச்சாராயத்தை ஒழிப்பது, சட்டவிரோத மது விற்பனையைத் தடுப்பது, துறையில் நேர்மையாகச் செயல்படுவது என்று டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளைப் பாராட்டுவதுதான் முறை. மத்தபடி, சமூக வலைதளங்களில் பரவும் அந்தச் சான்றிதழ் உண்மையான சான்றிதழ் அல்ல. அதை அடித்து, திருத்தி, யாரோ வேண்டாதவர்கள், இதை பெரிதாக்குகிறார்கள். மற்றபடி, இதில் சொல்வதற்கொன்றுமில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.