கடந்த டிசம்பர் 24-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட அழைப்பினாலேயே கமல்ஹாசன் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யம் தரப்பு கூறியது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதையடுத்து, இளங்கோவன் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளைச் செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் இந்த ஆதரவு 2024-ல் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதை உறுதிபடுத்தியிருப்பதாகக் கூறப்படடது. இந்த நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ வலைதளப் பக்கத்தில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் கட்சியை இணைப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவியது.

இது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம். “சமூக விரோதிகள் யாரோ எங்கள் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தை ஹேக் செய்து, இதுபோன்ற அறிவிப்பு ஒன்றை போட்டியிருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர்களிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் தொழில்நுட்பரீதியாக இணையதளத்தை மீட்டெடுத்து வருகிறார்கள். காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்ததால், யாரோ இந்த விஷம வேலையைப் பார்த்திருக்கிறார்கள். தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் அவருடைய குழந்தை மாதிரி. சம்பவம் குறித்து காவல்துறையிலும் புகார் கொடுக்கவிருக்கிறோம்” என்றார்.