'துரோகிகளை நம்ப வேண்டாம்..!' – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!

“துரோகிகளை நம்பி ஏமாற வேண்டாம்,” என, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
சேலம் வந்துள்ளார். எடப்பாடி, ஆட்டையாம்பட்டி மற்றும் வீரபாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்
உதயநிதி
ஸ்டாலின், தொடர்ச்சியாக, சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற மகளிர் சுய கடன் வழங்கும் விழாவில் பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பயனாளிகள் 26,649 பேருக்கு 221.42 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் பேசும் போது, தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாணவ, மாணவிகளுக்கான காலைச் சிற்றுண்டி திட்டம், பெண்களுக்கான சுய தொழில் செய்வதற்கான சிறப்பு கடன் உதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்தால் இன்று தமிழக முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருவதாகவும், சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 14.58 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கொரோனா கால கட்டத்தில் ஆட்சி அமைத்த போதும் சிறப்பான நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உன்னத திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இது, பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வரும் தமிழக அரசை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் அவதூறு பேசுவது தொடக்கதையாகி வருகிறது. இதையெல்லாம் புறந்தள்ளி மக்கள் நலனுக்காக மக்களின் திட்டங்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

போலிகளையும், பொய்யர்களையும், துரோகிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பான ஆட்சி நடப்பதால் எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.