மதுரை: “எனக்கு நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், ”உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. அவரின் பேரன் நான் வந்தால் அவருக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி தமிழில் ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன்.
ஒரேநாள் இரவில் மொத்த சிலைகளையும் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.
நீங்கள் எனக்கு ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள். வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள். அப்போது சீமானை தேடுவீர்கள். இது நடக்கும்.
சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். முக்குலத்தோருக்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் கள்ளர் எத்தனை பேர், மறவர் எத்தனை பேர், அகமுடையார் எத்தனை பேர் என எண்ணி வலிமைக்கேற்ப அமைச்சரவை கொடுக்க வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள். இது என்ன இட ஒதுக்கீடு, சமூக நீதி? எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும்” என்று சீமான் பேசினார்.