அடக்கி வாசிக்கும் அண்ணாமலை: இடைத்தேர்தல் மூலம் வரும் இடி – என்ன காரணம்?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் பாஜக மட்டும் அடக்கி வாசிக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று கூறிவந்த அண்ணாமலை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தனது ஆக்ரோஷத்தை குறைத்துக் கொண்டார். அதிமுக தான் பெரிய கட்சி, அவர்களிடத்தில் தான் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என பேசி வருகிறார்.

மத்தியில் ஆளும் கட்சி, பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிக்க கூட ஆள் இல்லையா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக போட்டியிட்டால் ஆதரவளிக்க தயார் என வாசல் ஏறிப் போய் ஓபிஎஸ்ஸும் சொல்லிவிட்டு வந்த பின்னரும் பாஜக யோசிக்கிறது. தேர்தல் வரும் வரை மட்டுமே அண்ணாமலை குரல் கொடுப்பாரா, என்ன நடக்கிறது கமலாலய வட்டாரத்தில் என்று விசாரித்தோம்.

‘தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் பாஜக தலைமை வகிக்கிறது என்றாலும், தமிழ்நாட்டில் அதிமுக பெரிய கட்சி. அதனால் அவர்களது முடிவுக்கு மதிப்பு கொடுத்து காத்திருக்கிறோம். மேலும் மக்களவைத் தேர்தலை குறிவைத்து முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலோ வேறு மாதிரியான பேச்சு நிலவுகிறது.

ஈரோடு கிழக்கில் பாஜகவுக்கு பெரியளவில் வாக்கு வங்கி இல்லை. 2011 தேர்தலில் அக்கட்சி அங்கு 3,244 வாக்குகள் பெற்றது. 2016 தேர்தலில் 5,549, வாக்குகள் பெற்றது. அந்த தொகுதியில் அக்கட்சி பெற்ற அதிக வாக்குகளே அது தான் எனும் போது தனித்துப் போட்டி என்ற விஷப் பரீட்சைக்கு எப்படி முன்வரும்? மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ளது. அதற்கு முன்பாக பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளை மட்டும் பெற்றால் அது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

பாஜக தமிழ்நாட்டில் வளர்கிறது என்று கூறிவரும் நிலையில் இடைத்தேர்தல் முடிவு இடியாய் இறங்கி விடக்கூடாது என்பதற்காகவே அடக்கி வாசிப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “சிலர் ரொம்ப அடக்கமாகப் பேசுகின்றனர். அடக்கமே தெரியாதவர்கள் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தந்திருக்கிறது என்று கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.