என்னை அன்பால் மாற்றியவர் லதா: மனைவிக்கு ரஜினிகாந்த் புகழாரம்..!!

ஒய்.ஜி. மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் சாருகேசி படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு சாருகேசி நாடகத்தைப் பார்த்தார் ரஜினிகாந்த். பிறகு அவர் பேசியதாவது:-

ஒய்.ஜி. மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அவர் தான் அப்போது என் மனைவியை அறிமுகம் செய்து எங்கள் திருமணத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தார். எனக்கு 73 வயது நடந்தாலும் நான் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம், என் மனைவி தான். நடத்துநராக இருந்தபோது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பலதரப்பட்ட கெட்ட பழக்கங்களை வைத்துக்கொண்டிருந்தேன்.

நடத்துநராக இருந்தபோது இருவேளை அசைவ உணவு வேண்டும் என்பேன். தினமும் மது அருந்துவேன். சிகரெட் எத்தனை பாக்கெட் என்று தெரியாது. நடத்துநராக இருந்தபோதே இப்படி என்றால் பணம், பேர், புகழ் வந்தபோது எப்படி இருந்திருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள். காலையிலேயே பாயா ஆப்பம், சிக்கன் 65. சைவ உணவு உண்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். இதை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றும்.

மது, சிகரெட், அசைவ உணவு இந்த மூன்றும் பயங்கரமான கூட்டணி. இந்த மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருடங்கள் கடைப்பிடித்தவர்கள் யாரும் எனக்குத் தெரிந்து 60 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது. அதற்குள்ளேயே போய்விட்டார்கள். 60 வயதுக்கு மேல் வாழ்கிறவர்கள், படுக்கையில் கிடந்து தான் வாழ்கிறார்கள். நடமாட முடியாது. இதற்கு நிறைய பேரை உதாரணம் சொல்லலாம். அந்த மாதிரி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் லதா.

இதுபோன்ற பழக்கங்களை எப்படிச் சொன்னாலும் விடமுடியாது. அதை அன்பால் மாற்றினார். சரியான மருத்துவர்களை அறிமுகப்படுத்தினார். ஓர் ஒழுங்கைக் கொண்டு வந்து என்னை மாற்றியது லதா அவர்கள். என் படங்களைப் பார்த்தாலே தெரியும், திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தேன், திருமணத்துக்குப் பிறகு எப்படி இருந்தேன் என்று. அதற்காகவும் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.