விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி… உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்டோருடன் காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்டங்களை வழங்கினார். பனமலை சமத்துவபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சர் ஐ.பெரியசாமி, “காணை ஒன்றியத்தில் கட்டப்படுகின்ற ஒன்றியக்குழு அலுவலகத்தை காலையில் பார்வையட்டோம். அதன் பின்னர், அடர் நடவு செய்யப்படுகின்ற தோட்டங்களையும், நெகிழி கழிவுகளை சாலை அமைப்பதற்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 15 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அங்கு, பத்தாயிரம் பேர் ஒன்றிணைந்து இன்று மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். இது ஒரு பெரிய நிகழ்ச்சிதான். எதிர்காலத்திற்கு நல்லதொரு முன்னுதாரணம். அதேபோல பனமலை சமத்துவபுரத்தில் உள்ள பழுதடைந்த வீடுகள் இப்போது புதியது போலவே பழுதுநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 190 கோடி மதிப்பீட்டில், 148 சமத்துவபுரங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. வரும் ஆண்டில் 88 சமத்துவபுரங்கள் 67 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட இருக்கிறது.
இந்த அரசு… ஏழை, எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே தலைசிறந்த அரசாக செயல்படுகிறது. ஊரக வளர்ச்சி சார்ந்த இன்னும் பல்வேறு திட்டங்களை, ஈரோடு தேர்தலுக்குப் பின்னால் மாநிலம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். கடந்த ஆட்சி காலத்தில் கிராமப்புற சாலைகளை போட எந்த திட்டமும் இல்லை. கிராமப்புறத்தில் உள்ள 10,000 கி.மீ சாலைகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு முதலமைச்சர் கிட்டத்தட்ட ரூ.4000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த வருடம் 10000 கி.மீ சாலை மேம்பாடு என்றால், ஐந்து வருடத்திற்கு 50000 கி.மீ சாலை மேம்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 390 கி.மீ தூரம் கிராமப்புற சாலை போடப்படவுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகள் இருந்தாலும், கூடுதல் வேலை நாட்களை வழங்குவதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம்; தற்பொழுது 80,000 கிராமங்கள் இருக்கிறது, 40,000 கிராமத்தில் ஒரே நேரத்தில் வேலை நடப்பதற்கான திட்டத்தை இப்போது தயார்படுத்தி வருகிறோம். விரைவில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது இருக்கும் சமத்துவபுரங்களை முதலில் புதியது போல உருவாக்கிவிடுவோம். புதியதாக சமத்துவபுரங்களை உருவாக்குவதை முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்.” என்றவரிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம் மற்றும் குப்பை தரம்பிரிக்கும் மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவை பெருவாரியான கிராமங்களில் செயல்படாமலே உள்ளதே! அதற்கான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியை முன் வைத்தோம்.

“திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பொருத்தமட்டில், பெரும்பாலான இடங்களில் நன்றாக பண்ணுகிறார்கள். இருப்பினும், அதனை முழுமையாக ஆய்வு செய்து, திடக்கழிவு மேலாண்மை குறித்த புகார் வரும் இடங்களில், துறையின் மூலமாக அதனை உடனுக்குடன் சரிசெய்து செயல்பட செய்துவிடலாம்” என்றார்.