பாஜகவை கழற்றிவிடுகிறாரா எடப்பாடி? இரண்டு நாளில் நடக்க போகும் சம்பவம்!

தமிழ்நாட்டு அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இபிஎஸ் தரப்பில் செங்கோட்டையன் தலைமையில், 117 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம், செம்மலை, கே.வி.ராமலிங்கம் மற்றும் மு.தம்பிதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.

இபிஎஸ் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்த நிலையில் ஓபிஎஸ் தரப்போ 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. இருப்பினும் பாஜக போட்டியிடாவிட்டால் மட்டுமே ஓபிஎஸ் அணி போட்டியிடும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்ககோட்டையன், “எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக இது அமையும். திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி திருப்பு முனையை உருவாக்கியதை போன்று ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த அளவுக்கு தான் மக்களின் மனநிலை உள்ளது. இந்தத் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும்.

அதிமுக தனித்தே களத்தில் நிற்கிறது. கூட்டணியில் அமைய உள்ள கட்சிகள் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களிலும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க உள்ளார். இன்று எல்லோரும் இந்த அணி இப்படி பிரிந்து உள்ளதே என சொல்கிறார்கள். ஆனால் 98.5 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உளே்ளாம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக 2 , 3 நாட்களில் நல்ல முடிவு வரும். நேற்று மதியமே தேர்தல் பணிக்குழுவினர் தொகுதிக்கு வந்துவிட்டனர்” என்றார்.

அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பொறுத்திருந்து பாருங்கள்” என பதிலளித்தார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக ஆதரவு இருக்கிறது என்று கூறாமல் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளதால் அதிமுக எடப்பாடி அணி பாஜகவை கழற்றிவிட்டு களம் காண தயாராகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.