விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணை தொடும் இந்தியா | Scientist Venkatraman surprises India as it touches the sky in space research

ஆங்கிலேயரிடம் ஒரு காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா இன்று அந்த நாட்டின் செயற்கைகோள்களை தன் ராக்கெட் மூலம் ஏவும் அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மங்கள்யான், சந்திரயான் என பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அதன் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரும் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இணை இயக்குனருமான முனைவர் வெங்கட்ராமன் மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தக்குளத்தை சேர்ந்தவர். பயின்ற திருமங்கலம் பி.கே.என்., பள்ளி விழாவில் பங்கேற்க வந்தவர் ‘தினமலர்’ சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது…

தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் பி.டெக் முடித்த போது டாடா நிறுவனம், ஏர் இந்தியா, இஸ்ரோவிலிருந்து பணியில் சேர அழைப்பு வந்தது. அப்பா தலைமையாசிரியர் ராமசாமி, ”மூன்றில் எது உனக்கு நன்றாக படுகிறதோ அதை தேர்வு செய். ஆனால் அத்துறையிலிருந்து மாறாமல் தொடர்ந்து சாதிக்க வேண்டும்,” என்றார். அதன்படி இஸ்ரோவில் சேர்ந்தேன்.

இந்த அண்டம் சூரிய குடும்பத்தை மையமாக கொண்டது. சூரியனை சுற்றி ஒன்பது கோள்கள் உள்ளன. இதுபோன்ற லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் கொண்ட ‘மில்கிவே'(பால்வெளி) உள்ளது. பல லட்சக்கணக்கான அண்டங்கள் உள்ளன. இதை பற்றி தெரிந்து கொள்ள விண்வெளி ஆராய்ச்சி உதவுகிறது.

செயற்கைகோள் ஏவ பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்று தகவல் தொழில் நுட்பம் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. அந்தளவுக்கு ஒரிடத்திலிருந்த தகவல் மற்றொரு இடத்திற்கு சென்றடைய எல்லா இடங்களிலும் டவர் வைக்க முடியாது. அதற்கு பதிலாக விண்வெளியில் செயற்கை கோள் மூலம் ரீசிவர், டிரான்ஸ்மிட்டர் அமைத்து தற்போதைய தகவல் தொழில் நுட்பம் சாத்தியமயமாக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப செயற்கைகோள் 36 ஆயிரம் கி.மீ., உயரத்தில் வினாடிக்கு 7.8 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகின்றன.

இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் மட்டுமே விண்வெளி துறையில் சாதித்து வருகின்றன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. வெளிநாடு செயற்கைகோள்களை இங்கிருந்து அனுப்பும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது.

சந்திரயான் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திரயான் 2 தற்போது விண்வெளியில் சுற்றி வருகிறது. பூமியிலிருந்து செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு நிலவிலிருந்து சேட்டிலைட், விண்கலம் அனுப்புவதன் மூலம் எரிபொருள், ஆற்றல் செலவுகளை குறைக்கலாம். பூமியில் கிடைக்காத சில கனிமங்கள் நிலவில் உள்ளன.

நான்கு விதமான பணிகளை சதீஷ் தவான் விண்வெளி மையம் மேற்கொள்கிறது. திட எரிபொருளுக்கான மூலப்பொருட்களை சேகரித்து தயாரிப்பது. பூமியில் சேடிலைட் செயல்படுவது போன்று விண்வெளியில் அது செயல்பட தேவையான ஆய்வுகளை மேற்கொள்கிறோம்.

பின் செயற்கை கோள் உதிரிபாகங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்கிறோம். திரவ எரிபொருள் கையாள்வது. பிறகு ரோடார் கண்காணிப்பு, சிக்னல் பெறுவது, போன்ற பணிகளை இம்மையம் மேற்கொள்கிறது.

பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை உள்ளது. மங்கள்யான் ஏவப்பட்ட போது விண்வெளி மையத்திற்கு வந்த பிரதமர் எங்களை ஊக்கப்படுத்தினார். சந்திரயான் 2 வெற்றி பெறாத போதும் ஊக்கப்படுத்தினார்.

சந்திரயான் 3 உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. ஆதித்யா யுவ மிஷன் மூலம் சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக சூரியன் அருகில் செல்ல முடியாது. சூரியன், பூமிக்கும் இடையே எல்1 பாயின்ட்டில் இரண்டின் ஈர்ப்பு விசையும் இருக்காது. அங்கு சேட்டிலைட் நிறுவி சூரியனில் மாற்றங்களை ஆராய திட்டமிட்டுள்ளது.

நாட்டின் சொத்து படித்த இளைஞர்கள். எதையும் புரிந்து படிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை கூடாது. சோர்ந்து போய் விடக்கூடாது. தலைமை பண்பு பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.

வாழ்த்த [email protected]

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.