தைப்பூசத் திருவிழா : பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்.!

தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உள்ளது. அதில், மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 

இந்த தைப்பூச திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், சிலர் பேருந்து மற்றும் ரெயில்கள் மூலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெறும். அதில், முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. 

இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதி உலாவும், இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு மற்றும் தங்கமயில் வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெறும். 

இந்த விழாவின் ஆறாம் நாளான வருகிற 3-ந்தேதி அன்று மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெறும். மறுநாள் 4-ந்தேதி தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். 

அதன் பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 

மேலும் வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற உள்ளது. இந்தத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.