தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இதனால் தற்போது தனது அடுத்த படத்தில் தான் இழந்த பெயரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயிலர் படத்திற்காக இயக்குனர் நெல்சன் கடுமையாக உழைத்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஒவ்வொரு வாரமும் படக்குழு படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டு கொண்டே இருக்கும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர்‘ படக்குழுவினர் முன்னர் வெளியிட்ட க்ளிம்ப்ஸ் வீடியோவானது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. திரையுலகின் பல்வேறு பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது. ஏற்கனவே படத்தின் தயாரிப்புக்குழு வெளியிட்டிருந்த தகவல்களின்படி, ‘ஜெயிலர்’ படத்தில் கன்னட திரையுலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாள திரையுலகில் இருந்து மோகன்லால் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து சுனில் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் ‘ஜெயிலர்‘ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பிரபலம் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜெயிலர் படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமான ஜாக்கி ஷ்ரோஃப் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஜோத்பூரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். ஜாக்கி, ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது இது முதன்முறையல்ல, ஏற்கனவே சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஹிந்தியில் வெளியான உத்தர் தக்ஷின் படத்தில் இருவரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.