நம் வாசகி ஒருவர், `உறவு கொள்ளும்போது கணவர் லைட் போடச் சொல்கிறார்; கண்களைத் திறந்து அவரைப் பார்க்கச் சொல்கிறார். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. கூச்சமாக இருக்கிறது. என்ன செய்வது’ என்று கேட்டிருந்தார். அவருடைய பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

“உங்களுடைய சங்கடம் எனக்குப் புரிகிறது. கூடவே, செக்ஸ் பற்றிய தெளிவான மற்றும் விஞ்ஞானபூர்வமான விவரம் தெரியாததால்தான் இந்தச் சங்கடம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதும் புரிகிறது. காலம் காலமாக தாம்பத்திய உறவு என்றாலே, ஆபாசம், அதுபற்றி பேசக்கூடாது, அதை இருட்டில்தான் வைத்துக்கொ ள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கப்பட்டிருப்பதுதான் உங்கள் கூச்சத்துக்கு காரணம்.
பெட்ரூமில் விளக்கை அணைத்துவிட்டால் எப்படி ஒருவரையொருவர் பார்த்து ரசிக்க முடியும். தாம்பத்திய உறவில் நல்லதொரு தூண்டுதல் வர வேண்டுமென்றால், மனிதர்களுடைய ஐந்து உணர்வு உறுப்புகளும் தன் இணையை அனுபவிக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களுடைய தாம்பத்திய உறவு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
கண்களை மூடிக்கொண்டு, விளக்கையும் அணைத்துவிட்டால் கண்களால் அனுபவிக்கிற தாம்பத்திய மகிழ்ச்சி உங்களுக்கும் கிடைக்காது; உங்கள் கணவருக்கும் கிடைக்காது. உங்கள் வீட்டு பெட்ரூம், மூடிய கதவு, உங்கள் கணவர்… அதனால், கூச்சத்தை விட்டுத் தயங்காமல் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் கணவர் ஆசைப்படுவதில் தவறொன்றும் கிடையாது. கண்களைத் திறந்தால்தான் உங்கள் கணவரின் உருவத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்படலாம். உறவின்போது முழுமையான மகிழ்ச்சி கிடைக்க லைட் வெளிச்சம் இருந்தால் நல்லது. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது இன்னும் நல்லது.
நீங்கள் கூச்சத்தைவிட்டு சௌகர்யமாக உணர்வதற்கு உதவி வேண்டுமென்றால், பாலியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். இந்த நிலையை நீங்கள் எட்டும் வரை, உங்கள் கணவர் உங்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்பதுதான் உங்கள் கணவருக்கு நான் சொல்ல விரும்புவது என்கிறார்” டாக்டர் நாராயண ரெட்டி.