பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநியில், தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்கினர்.

கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, பூர்ணாகுதி போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

 தொடர்ந்து வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலின் உட்பிரகாரங்களை சுற்றி கொடி எடுத்து வரப்பட்டது. காலை 9.30 மணியளவில் மீன லக்னத்தில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருவிழா கொடியேற்றப்பட்டது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வருவார்.

முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் பிப். 3ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்கிறது. தைப்பூசத் தேரோட்டம் பிப். 4ம் தேதி மாலை 4.30 மணிக்கு ரதவீதிகளில் நடைபெறும். பிப். 7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா முடிவடைகிறது. விழாவை முன்னிட்டு பிப். 2 முதல் 6ம் தேதி வரை  மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

450 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, கானாடுகாத்தான், கண்டனூர் உட்பட 96 ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் காவடி எடுத்து பழநிக்கு புறப்பட்டனர்.  இந்த பாரம்பரியம் 450 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.