திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. இவர்கள் இரண்டு பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது செமிபாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள், இவர்களது மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளனர்.
இதனால் நிலை தடுமாறிய கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்பொழுது சுந்தரி அணிந்திருந்த நாலு பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து இரண்டு வாலிபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பல்லடம் தாராபுரம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் (27) என்பதும், சுந்தரியின் 4 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 4 பவுன் தங்கச் செயலியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.