கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில்! நியமனம்… | Appointment of 5 judges recommended by collegium… soon!

புதுடில்லி,’கடந்த ஆண்டு, டிச., இறுதியில், ‘கொலீஜியம்’ பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் நியமன உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று உறுதி அளித்தது. அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பான பரிந்துரையில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு, நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

இதையடுத்து, ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ‘கொலீஜியம்’ கடந்த ஆண்டு டிச., 13ல் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஏழு நீதிபதிகள்

இதில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பெயர் இடம் பெற்று இருந்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட ஏழு நீதிபதிகள் குறைவாக இருப்பதால், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் பெயர்களையும், கொலீஜியம் பரிந்துரை பட்டியலில் இணைத்தது.

மேலும், பல்வேறு மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளை, வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு பணியிட மாற்றம் செய்யவும், கொலீஜியம் பரிந்துரை செய்தது.இந்த நியமனங்கள் மற்றும் பணியிட மாற்ற உத்தரவுகளை பிறப்பிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்ததை அடுத்து, நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. கொலீஜியம் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்த கோரி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தாமதம்

இந்த மனு, கடந்த மாதம் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளை கையாள்வதில் தாமதம் ஏற்படுவது, நீதி நிர்வாகத்தை பாதிப்பது மட்டுமின்றி, இதில் மூன்றாம் தரப்பு தலையிடுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் பரிந்துரை, கடந்த ஆண்டு டிச., மாதம் அளிக்கப்பட்டது. தற்போது பிப்., மாதம் வந்துவிட்டது. எப்போது நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி பதில் அளிக்கையில், ”ஐந்து நீதிபதிகளின் நியமன உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும். நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களை சிறிது காலம் ஒத்தி வைக்கும்படி, அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கோரிக்கை விடுத்தார். அந்த நேரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிட மாற்றம் தொடர்பான பரிந்துரையை நிறைவேற்றுவதில் அரசு காலதாமதம் செய்து வருவதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

கடுமையான முடிவு

அப்போது அவர்கள் கூறியதாவது:

உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்ற ஒரு பெயரை கொலீஜியம் பரிந்துரைத்தால், அந்த பணியிட மாற்றத்தை நிறைவேற்றாமல், அரசு காலதாமதம் செய்வது மிக தீவிரமான பிரச்னையாக பார்க்கிறோம்.

இந்த விவகாரத்தில் மிக கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு எங்களை நீங்கள் தள்ளுகிறீர்கள். இதில் மூன்றாம் தரப்பு உள்ளே நுழைவதை அனுமதிக்க முடியாது. ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஏற்பட்டால் நீதித்துறை நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

ஒரு நீதிபதியை குறிப்பிட்ட மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. அந்த நீதிபதி இன்னும் 19 நாளில் பணி ஓய்வு பெறுகிறார். அவர் தலைமை நீதிபதி ஆகாமலேயே பணி ஓய்வு பெறவேண்டும் என்பதையா நீங்கள் விரும்புகிறீர்கள்?

இவ்வாறு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

”இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அட்டர்னி ஜெனரல் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.