வட இந்தியர்களை எதிர்த்து மதுரை முழுவதும் போஸ்டர்… விஜய் சேதுபதி ரசிகர்களின் வேலையா இது?

Madurai Posters Against North Indians: கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடமாநில தொழிலாளர்கள், ரயில் மூலம் சாரை சாரையாக வந்து சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.  

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்குவது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இந்த சம்பவத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.  இதேபோன்று இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகளவிற்கு இருப்பதாகவும், இதனால் தமிழ்நாடு தொழிலாளர்களின் வாழ்வாதரமே முடங்கிவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் என்று, அதாவது அகில இந்திய சங்குத்தேவன் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதுமாக அபாயம்… #Boycott_Vadakkans போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

மேலும் அந்த போஸ்டரில் இது தமிழ்நாடா? வடநாடா ? விழித்துக்கொள் தமிழா என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.  வடமாநில தொழிலாளர்களின் வருகைக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்று கூறப்படும் சிலர் மதுரை முழுவதிலும் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டரில் அச்சிடப்பட்ட சில வார்த்தைகள் வட இந்தியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினரை இவ்வாறு குறிப்பிடுவது ஒருபோதும் சரியாகாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சில நாள்களுக்கு முன்பு, விஜய் சேதுபதியின் குரலை மிமிக்ரி செய்து தொலைக்காட்சி தொடரில் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.