உளவு பலூன் விவகாரம்: சீனாவின் விளக்கங்களை ஏற்க பென்டகன் மறுப்பு

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மொன்டானா பகுதியில், ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது.

அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என பின்னர் தெரிய வந்தது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது.

அதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இதனை அடுத்து, கனடா நாட்டு தேசிய பாதுகாப்பு துறையும், அமெரிக்காவுடன் இணைந்து, சந்தேகத்திற்குரிய சீனாவின் உளவு பலூனின் இயக்கம் பற்றி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

கனடா நாட்டு மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர். கனடாவின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அந்நாடு தெரிவித்து உள்ளது.

இதன் எதிரொலியாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருந்த சீன பயணம் தள்ளி போடப்பட்டு உள்ளது. அமெரிக்க வான்வெளியில், சீனாவின் உளவு பலூன் பறந்திருப்பது, அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் என தெளிவாக தெரிகிறது என பிளிங்கன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள விளக்கத்தில், அது குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து வந்த ஆகாய கப்பல் வகையை சேர்ந்த விமானம். ஆராய்ச்சி பணியில், குறிப்பிடும்படியாக வானிலை ஆய்வு தொடர்புடைய பணியில் ஈடுபட கூடிய நோக்கத்திற்கானது.

மேற்கத்திய காற்று பாதிப்பால் மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையாலும், திட்டமிட்ட இலக்கை விட்டு அது திசைமாறி தொலைவுக்கு சென்று விட்டது என தெரிவித்து உள்ளது.

அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, எதிர்பாராது நடந்த இந்த சூழலை பற்றி விளக்குவோம் என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும், பென்டகனின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறும்போது, அந்த பலூன் தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க கண்ட பகுதியின் மையத்தின் மேல் செல்கிறது. அது மக்களுக்கு ராணுவ அல்லது உடலியல் சார்ந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என்பது பற்றி இந்த நேரத்தில் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து அதனை கண்காணித்து முடிவுகளை பற்றி ஆய்வு செய்வோம் என கூறியுள்ளார்.

சீனா அளித்துள்ள விளக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சீன அரசின் விளக்கம் பற்றி நன்றாக எங்களுக்கு தெரியும். ஆனால், உண்மை என்னவெனில் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும்.

அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. அது ஏற்று கொள்ளப்பட முடியாதது. இதனை நாங்கள் சீன அரசிடம் நேரடியாகவே தூதரக அளவில் உள்பட பல்வேறு மட்டங்களில் தெரிவித்து விட்டோம் என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.