ரயில்வே அமைச்சர் அளித்த முக்கிய தகவல்: கோடிக்கணக்கான இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்ஃபர்ம் டிக்கெட்) முன்பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில், அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை வழங்க அமைச்சகம் ஒரு செயல்முறையை வகுத்துள்ளது. இதன் தகவலை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே பகிர்ந்துள்ளார். தனது புதிய செயல்திட்டத்தில், இந்திய ரயில்வே இப்போது டிக்கெட் வழங்கும் திறனை நிமிடத்திற்கு 25000 இலிருந்து 2.25 லட்சமாகவும், விசாரணை திறனை நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் இதற்கான செயல்திட்டத்தை வழங்கினார்
இந்த நற்செய்தி மற்றும் முக்கிய தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை ஊடகங்கள் மூலம் ரயில்வே பயணிகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் 2023-24 நிதியாண்டில் 7000 கிமீ புதிய ரயில் பாதைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டில் உள்ள 2,000 ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்படும் ‘ஜன் சுவிதா’ கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது நிமிடத்திற்கு சுமார் 25,000 டிக்கெட்டுகளை வழங்கும் திறன் உள்ளது. அதை நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட்டுகளாக உயர்த்துவதே எங்கள் இலக்கு.” என்றார்.
அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், ‘விசாரணை திறன் நிமிடத்திற்கு நான்கு லட்சத்தில் இருந்து நிமிடத்திற்கு 40 லட்சமாக உயர்த்தப்படும். நடப்பு நிதியாண்டில் 4500 கிமீ (ஒரு நாளைக்கு 12 கிமீ) ரயில் பாதை அமைக்கும் இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது.’ என்று தெரிவித்தார்.
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோவில் ‘ஃப்ளெக்ஸி’ கட்டணம்
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் ‘ஃப்ளெக்ஸி’ கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது 144 ரயில்களில் ‘ஃப்ளெக்ஸி’ கட்டணம் அமலில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ‘ஃப்ளெக்ஸி’ கட்டணத் திட்டத்தின் வரம்பை அதிகரிப்பதற்கான எந்த யோசனையும் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில், ‘ஃப்ளெக்ஸி’ கட்டணத்தின் மூலம் கிடைத்த கூடுதல் வருமானம் சுமார் 3,357 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.