ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகள் தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி நாடுமுழுவதும் ஜி20 மாநாடுகள், கருத்தரங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைப்புகளில் நடக்கும் கருத்தரங்கு, கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
அந்தவகையில், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜி-20 பணிக்குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம் லக்னோவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. லக்னோ நகருக்கு செல்லும் வாகனத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வாகனம் பல்வேறு நகரங்களுக்கும் பயணிக்க உள்ளது.
இந்த வாகனத்தில் பிரதமரின் ஜன் தன் திட்டம், டிஜிலாக்கர், ஆதார், உமாங்க், மின்வழி ரசீது, இ-ஔஷாதி, ஆரோக்கிய சேது, கோவின், இ-ரூபி உள்ளிட்ட டிஜிட்டல் இந்தியாவின் பல்வேறு விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம் குறித்து இந்தியாவின் ஜி20 தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி (ஷெர்பா), அமிதாப் காந்த் டிஜிட்டல் இந்தியா தொடர்பாக டெல்லி சுஷ்மா சுவராஜ் பவனில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமிதாப் காந்த், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கட்டமைப்புகள் தொடர்பான தகவல்கள் இந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ளன என்றார். இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த வாகனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.