பொருளாதரர ரீதியில் முன்னேறுவது சகலரினதும் எதிர்பார்ப்பாக அமைய வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு.

சவால்களை வெற்றிகொண்டு பொருளாதரர ரீதியில் முன்னேறுவது சகலரினதும் எதிர்பார்ப்பாக அமைய வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற மிக முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் 75வது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

எங்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திர இலங்கையில் பிறந்ததன் பாக்கியத்தை அங்கீகரிக்கின்ற வகையிலும், இந்த முக்கியமான மைற்கல்லை அடைந்திருப்பதையிட்டு எமது தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் பெருமிதத்துடனும் இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்து காலனித்துவ ஆட்சியின் கீழ் வாழ்ந்து அனுபவித்த வேதனைகள் பற்றியும் எமது முன்னோர்கள் எமக்கான சுதந்திரத்தை பெற்றுத் தருவதற்காக மேற்கொண்ட போராட்டங்கள் பற்றி எண்ணிப்பார்ப்பதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

1815ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி, சரணடையும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், பிரித்தானியக் கொடி ஏற்றப்பட்ட போது, வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் பிரித்தானியக் கொடியை அகற்றியவேலையிலேயே அந்நிய ஆதிக்கத்தின் மீதான இலங்கையின் வெறுப்பும், எதிர்ப்புணர்வும் ஆரம்பமானது.

இன்று நாம் எமது சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அதற்காகப் போராடியவர்களுக்கும், எமது நாட்டிற்காக ஒரு தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்தவர்களுக்கும், அதற்காகத் தம்மையே தியாகம் செய்தவர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.

தாய்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது எம் முன்னோர்கள் வெளிப்படுத்திய துணிவு, வீரம் மற்றும் அவர்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்கள் நம் நினைவுகளில் இருந்து மறைந்துவிடுவதற்கு இடமளிக்கக் கூடாது.

1818 இல் ஊவா-வெல்லஸ்ஸவிலும் 1848 இல் மாத்தளையிலும் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சிகள் சொல்லொணாத் தியாகங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக அமைந்ததுடன், கடந்த நூற்றாண்டில் ஒரு அகிம்சை வழி சுதந்திரப் போராட்டம் இடம்பெற்றது.

அனகாரிக தர்மபால, டி.பி. ஜயதிலக்க, எப்.ஆர் சேனநாயக்க, டி.எஸ்.சேனநாயக்க, ஹென்றி பேதிரிஸ், டி.பி.ஜாயா, பொன்னம்பலம் இராமநாதன், என்.எம். பெரேரா, பிலிப் குணவர்தன, எஸ்.ஏ. விக்கிரமசிங்க போன்ற பல தலைவர்கள் சுதந்திர இயக்கத்தை அதன் வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் சென்றனர்.

கடந்த 75 ஆண்டுகளில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடம் இருந்து கடினமாக வென்றெடுக்கப்பட்ட சுதந்திரத்தை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் இதேபோன்ற தியாகங்களைச் செய்த ஆயுதப் படைகளைச் சேர்ந்த துணிச்சலான உறுப்பினர்களுக்கும் நாம் எமது மரியாதையை செலுத்த வேண்டும்.

ஒரு சுதந்திர தேசமாக நாம் பல முன்னேற்றங்களை அடைந்து ஒரு இளைஞர் படையை கட்டியெழுப்பினோம், எமது மக்களுக்கு சிறந்த சுகாதார மற்றும் கல்விச் சேவைகளை வழங்கினோம். எவ்வாறாயினும், அண்மைக்காலமாக எமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பொருளாதார பின்னடைவுக்கு முகம்கொடுத்துள்ளது. தன்னிறைவையும் உணவுப் பாதுகாப்பையும் அடைய விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சவால்களை முறியடித்து பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றகரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எமது உண்மையான விருப்பமாகும்.

இந்த நாட்டின் பெருமைமிக்க குடிமக்களாக, எமது நாட்டின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து எமது கடமையை நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும்.

சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக எம் முன்னோர்கள் செய்த தியாகங்களை மனதில் வைத்து, எம் தாய்நாட்டிற்காக சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்க உறுதி பூணுவோம்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.