கொத்து கொத்தாய் மரணம்… பலி 600ஐ தாண்டியாச்சு- துருக்கியின் நிலை என்ன?

பிப்ரவரி 6ஆம் தேதி இப்படி ஒரு பெரும் துயரத்துடன் விடியும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இயற்கையின் முன்னாள் நாம் சிறு துரும்புகள். ஒருபோதும் அவற்றை நம்மால் கணிக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு சம்பவம் உதாரணமாய் அமைந்துவிட்டது. துருக்கியில் இன்று அதிகாலை 4.17 மணி. காஸியன்டெப் நகர் அப்படியே ஆட்டம் கண்டது. பூமி அதிர வீட்டில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

பயங்கர நிலநடுக்கம்

பலர் வெளியே வருவதற்குள் கட்டிடம் இடிந்து மண்ணோடு மண்ணாக மாறிப் போனது. 7.4 ரிக்டர் அளவில் தொடங்கிய நிலநடுக்கம் துருக்கியின் பல்வேறு நகரங்களை சுமார் 40 முறை ஆட்டம் காட்டியது. அதிகபட்சமாக 7.8 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் துருக்கி எல்லையில் சிரியாவை ஒட்டி நிகழ்ந்ததால் அந்த நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

துருக்கி நிலநடுக்கம்: 100ஐ தாண்டிய பலி… சிரியாவையும் விட்டு வைக்கல!

உயிரிழப்புகள் அதிகரிப்பு

துருக்கியில் கடந்த 100 ஆண்டுகளில் காணாத மிக மோசமான நிலநடுக்கம் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். துருக்கியில் 248 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிரியாவில் 245 பேர் பலியாகியுள்ளனர். 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தெந்த நகரங்கள் பாதிப்பு?

பல இடங்களில் இடிபாடுகளை அகற்ற முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக கஹ்ராமன்மராஸ், அதியமான், மாலதியா, தியார்பகிர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மாலதியாவில் உள்ள 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி பகுதியளவு சேதமடைந்துள்ளது.

விரைவில் தேர்தல்

அங்குள்ள 14 மாடிகள் கொண்ட கட்டிடமும் உருக்குலைந்து போனது. வரும் மே 14ஆம் தேதி துருக்கியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் இப்படி ஒரு விபரீதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக மீட்பு பணிகளை அதிபர் எர்டோகன் முடுக்கி விட்டுள்ளார். இவரது செயல்பாடுகள் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணில் விரலை விட்ட சீனா; சுட்டு தள்ளி உளவு பலூனை பஸ்பமாக்கிய அமெரிக்கா!

ஆறுதல் கூறிய அதிபர்

எனவே பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரமிது. கடினமான நேரத்தை மன வலிமையுடன் எதிர்கொள்வோம். உதவி தேவைப்படுவோருக்கு தேவையானதை அளிப்போம் என்று அறிவுறுத்தியுள்ளார். சமீபத்திய தகவலின்படி மொத்த பலி எண்ணிக்கை 600ஐ தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

கைகொடுக்கும் உலக நாடுகள்

இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை துருக்கி மற்றும் சிரியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. சிரியாவிலும் அலெப்போ, லடாக்கியா, ஹமா, டார்டஸ் ஆகிய நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.