டமஸ்கஸ்: துருக்கி – சிரிய எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு சிரியாவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கி – சிரியா எல்லையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் துருக்கியின் நகர் காசியான்டேப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், சிரியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் வெளியாகாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், பூகம்பத்தினால் சிரியாவின் அஃப்ரின் நகரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரம் தெரியவந்துள்ளது.
அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் அஃப்ரின் நகரம் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏராளமான கட்டிடங்கள் சரிந்து தரைமட்டமாகியுள்ளன. குறிப்பாக அல் விலாத், அல் மசவுத் ஆகிய தெருக்களில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
பூகம்பம் குறித்து சிரிய சுகாதாரத் துறை அமைச்சகம் விவரிக்கும்போது, “பூகம்பத்தினால் இதுவரை 247 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அஃப்ரின் நகரில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியாவின் வைட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு, தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் பலரும் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. | வாசிக்க > துருக்கி பூகம்பம் | பலி 640 ஆக அதிகரிப்பு; பலரும் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு