`ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பாக தென்னரசை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவிக்க, ஏட்டிக்குப் போட்டியாக `அ.தி.மு.க சார்பாக செந்தில் முருகனை வேட்பாளராக அறிவிக்கிறேன்’ என்று அறிவித்தார் ஓ.பி.எஸ். இந்த நிலையில், உச்ச நீதிமன்றமோ பொதுக்குழுவைக் கூட்டி ஒரு வேட்பாளரைத் தேர்வுசெய்யுமாறு உத்தரவிட்டது. பின்னர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இதில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என ஓ.பி.எஸ் தரப்பு குற்றம்சாட்டியது.

அதோடு, `இரட்டை இலைச் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ எனக் கூறி, தங்கள் வேட்பாளரை ஓ.பி.எஸ் தரப்பு வாபஸ் பெற்றது. இதற்கிடையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியிலுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரையே பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தேர்வு செய்ததாகக் கடிதம் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் ஏ, பி படிவங்களில் அ.தி.மு.க சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் குறித்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி சிவகுமாருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் அ.தி.மு.க-வின் ஏ, பி படிவங்களில் கையொப்பமிட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. மேலும், தமிழ்மகன் உசேனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரம் குறுகிய காலத்துக்கு, அதாவது இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.