புதுடெல்லி: ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உலகின் குரு, அமிர்த காலம் என்றெல்லாம் பிரதமர் மோடி உரத்த குரல் எழுப்பி வருகின்றார். இந்நிலையில், அவருக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் ஒருவரின் (அதானி) நிதி முறைகேடுகள் வெட்ட வெளிச்சமாகி உள்ளன.
தனது பணக்கார நண்பர்களுக்கு சாதகமாக செயல்படுவதே பிரதமர் மோடியின் கொள்கை. இதனால், நாட்டுக்கு ஏற்படும் இழப்பை நடுத்தர மக்கள் சுமக்க வேண்டிய நிலை உள்ளது. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் அரசுக்கு ஏற்படும் இழப்புகளை சுமக்க வேண்டிய நிலைக்கு நடுத்தர மக்கள் தள்ளப்படுகின்றனர்.
நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டி எல்ஐசி, எஸ்பிஐ ஆகியவற்றில் சேமித்த பணம், மோசமாக நிர்வகிக்கப்படும் தனியார் நிறுவனங்களுக்கு முதலீடாக வழங்கப்படுகிறது. விலைமதிப்பில்லாத பொதுத் துறை நிறுவனங்களை மிகவும் குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது.
மத்திய அரசின் 2023-24 பட்ஜெட், ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதித் தாக்குதலாகும்.
இவ்வாறு பேட்டியில் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அதானி குழும விவகாரம்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நாடாளுமன்றத்தில் அதானி குறித்த விவாதத்தை தடுக்க பிரதமர் மோடி தன்னால் ஆன அனைத்தையும் செய்வார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதானி குழும விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட்டு அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும். லட்சக்கணக்கான கோடி ஊழலை வெளிப்படுத்துவதன் மூலம் அதானியின் பின்னால் ஒளிந்துள்ள சக்தி என்ன என்பதை நாடு அறிய வேண்டும்’’ என்றார்.