சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, ஜி.திலகவதி ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதில் சிறுபான்மையினருக்கு எதிராக விக்டோரியா கவுரி கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார். வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை பேசியிருக்கிறார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதுவும் விக்டோரியா கவுரி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு சற்று முன்னதாக வழக்கு விசாரணை தொடங்கியது.
கொலிஜியம் பரிந்துரை
இதனால் அவர் பதவியேற்பாரா? இல்லை பதவியேற்க தடை விதிக்கப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்தன. இந்த விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களது பரிந்துரையை அளித்துள்ளது. நீதிபதியை நியமிக்கும் போது அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் கொலிஜியம் கருத்து கேட்கும்.
நீதிபதிகள் உதாரணம்
மனுதாரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்? என்று கேள்வி எழுப்பினர். நீதிபதிகளை அவர்களது சமூக வலைதளப் பதிவுகளின் அடிப்படையில் பின் தொடர முடியாது. மேலும் நாங்களும் மாணவர் பருவத்தில் அரசியல் கட்சிகளிடம் தொடர்பில் இருந்தோம்.
அரசியல் தலையீடு
கடந்த 20 ஆண்டுகளில் நீதித்துறை நடவடிக்கைகளில் எங்களின் அரசியல் நிலைப்பாட்டை ஒருபோதும் திணித்தது இல்லை. இந்த விஷயத்தை விக்டோரியா கவுரி அவர்களுக்கும் பொருத்தி பார்க்கலாம் தானே எனக் கேட்டனர். அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்று நீதிபதி கண்ணா தெரிவித்தார். இறுதியில் விக்டோரியா கவுரி பதவியேற்க எந்தவித தடையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் விக்டோரியா கவுரி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன் ஓராண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக எந்தவித சிக்கலும் இன்றி விக்டோரியா கவுரி புன்னகை பூத்த முகத்துடன் பதவியேற்றுக் கொண்டார்.
யார் இந்த விக்டோரியா கவுரி?
1973ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தவர்.1955ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.கன்னியாகுமரி, கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றியவர்.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சிவில், கிரிமினல், வரி தொழிலாளர் வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.2015 முதல் 2022 வரை மத்திய அரசின் வழக்கறிஞராகவும், சிபிஐ வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.2022 முதல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.