இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா இதுவரை சாதித்தது என்ன..?

நாக்பூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான மோதல் எப்போதும் யுத்தம் போன்று வர்ணிக்கப்படுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது இது 15-வது முறையாகும். அதற்கு முன்பாக அந்த அணி இந்திய மண்ணில் இதுவரை சாதித்தது என்ன? என்பதை பார்க்கலாம்:-

1956-ம் ஆண்டு (3 டெஸ்ட்) – ஆஸ்திரேலியா வெற்றி (2-0) :-

ஆஸ்திரேலியாவின் முதல் இந்திய பயணம் இது தான். இயான் ஜான்சன் தலைமையில் வந்திறங்கிய ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் பாலி உம்ரிகர் தலைமையிலான இந்தியாவை தோற்கடித்தது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் கூட 300 ரன்களை தொடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ரிச்சி பெனட் (23 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் ராய்வின்ட்வால் (12 விக்கெட்) ஆகியோர் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தனர்.

1959-60-ம் ஆண்டு (5 டெஸ்ட்) – ஆஸ்திரேலியா வெற்றி (2-1) :-

கான்பூரில் நடந்த டெஸ்டில் குலாப்ராய் சாம்சந்த் தலைமையிலான இந்திய அணி நிர்ணயித்த 225 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 105 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிவு செய்த முதல் வெற்றி இது தான்.

இரு இன்னிங்சையும் சேர்த்து சுழற்பந்து வீச்சாளர் ஜேசுபாய் பட்டேல் 14 விக்கெட்டுகளை சாய்த்து ஹீரோவாக ஜொலித்தார். இதில் அவர் முதல் இன்னிங்சில் 69 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீடித்தது. இருப்பினும் டெல்லி, சென்னையில் நடந்த டெஸ்டுகளில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. மேலும் இரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.

1964-ம் ஆண்டு (3 டெஸ்ட்) – டிரா (1-1) :-

இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி டிரா ஆனது.

1969-ம் ஆண்டு (5 டெஸ்ட்) – ஆஸ்திரேலியா வெற்றி (3-1) :-

இந்த தொடரிலும் ஆஸ்திரேலியாவே கோலோச்சியது. பில்லி லாவ்ரி தலைமையிலான ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் பட்டோடி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்து தொடரை வசப்படுத்தியது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே மாலெட் மொத்தம் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

1979-ம் ஆண்டு (6 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (2-0) :-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 டெஸ்டுகளில் ஆடிய ஒரே தொடர் இது தான். கேப்டன் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங் சர்க்கார், சேத்தன் சவுகான், சையத் கிர்மானி, குண்டப்பா விஸ்வநாத் என்று வலுவான படையாக களம் இறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது.

கான்பூரில் 153 ரன்கள் வித்தியாசத்திலும், மும்பையில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வென்ற முதல் தொடர் இது தான். எஞ்சிய போட்டிகள் டிராவில் முடிந்தன. கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் தலா 2 சதங்கள் அடித்ததும், கபில்தேவ் (28 விக்கெட்), இடக்கை சுழற்பந்து வீச்சாளர் திலிப் டோஷி (27 விக்கெட்)ஆகியோரின் விக்கெட் வேட்டையும் முத்தாய்ப்பாக அமைந்தன.

1986-ம் ஆண்டு (3 டெஸ்ட்) – டிரா (0-0) :-

இந்த தொடரில் சென்னையில் அரங்கேறிய முதலாவது டெஸ்டை எளிதில் மறந்து விட முடியாது. இதில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா நிர்ணயித்த 348 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியின் விளிம்புக்கு வந்தது.

கவாஸ்கர் (90 ரன்), மொகிந்தர் அமர்நாத் (51 ரன்) அரைசதம் அடித்தனர். வெற்றிக்கு 17 ரன் தேவையாக இருந்த போது அடுத்தடுத்து 3 விக்கெட் சரிந்தன. ஒரு ரன் தேவைப்பட்ட போது, மனிந்தர்சிங் (0) கடைசி விக்கெட்டாக எல்.பி.டபிள்யூ. ஆக, திரில்லிங்கான இந்த டெஸ்ட் டையில் (சமன்) முடிந்தது. அதாவது இந்தியாவின் ஸ்கோர் 86.5 ஓவர்களில் 347 ரன்களில் நின்று போனது. டெஸ்ட் வரலாற்றில் டையில் முடிந்த 2-வது ஆட்டம் இது தான்.

1996-ம் ஆண்டு (ஒரு டெஸ்ட்) – இந்தியா வெற்றி (1-0) :-

சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி டெல்லியில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது.

1998-ம் ஆண்டு (3 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (2-1) :-

முதல் இரு டெஸ்டில் இந்தியாவும், கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதில் கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் வியப்பூட்டியது. 5 வீரர்கள் அரைசதம், கேப்டன் முகமது அசாருதீன் சதம் (163 ரன்) என்று இந்தியா 5 விக்கெட்டுக்கு 633 ரன்கள் குவித்ததுடன், இன்னிங்ஸ் வெற்றியையும் சுவைத்தது.

ஷேன் வார்னேவின் சுழல் ஜாலத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது இந்த தொடரில் தான். அவர் 3 டெஸ்டில் வெறும் 10 விக்கெட் மட்டுமே எடுத்தார். 2 சதம் உள்பட 446 ரன்கள் சேர்த்த சச்சின் தெண்டுல்கர் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

2001-ம் ஆண்டு (3 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (2-1) :-

தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 171 ரன்னில் ஆட்டமிழந்து ‘பாலோ-ஆன்’ ஆன இந்திய அணி அதன் பிறகு விசுவரூபம் எடுத்தது. 2-வது இன்னிங்சில் வி.வி.எஸ்.லட்சுமண் (281 ரன்), ராகுல் டிராவிட் (180 ரன்) ஆகியோரின் அபார பேட்டிங்கால் இந்தியா 657 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சிறப்பை லட்சுமண் பெற்றார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 384 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 212 ரன்னில் முடங்கியது. இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டெஸ்ட் வரலாற்றில் ‘பாலோ-ஆன்’ ஆன ஒரு அணி அதன் பிறகு வெற்றி கண்ட 2-வது நிகழ்வாக இது பதிவானது. மேலும் தொடர்ச்சியாக 16 டெஸ்டுகளில் வென்று இருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டும் அடங்கும். டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் இவர் தான். இதன் பின்னர் சென்னையில் நடந்த கடைசி டெஸ்டிலும் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் தனதாக்கியது.

2004-ம் ஆண்டு (4 டெஸ்ட்) – ஆஸ்திரேலியா வெற்றி (2-1) :-

இந்திய மண்ணில் மறுபடியும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆஸ்திரேலியா இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), கவுதம் கம்பீர் (இந்தியா) ஆகியோர் டெஸ்டில் அறிமுகம் ஆன தொடர் இது தான். தொடரை பறிகொடுத்தாலும் மும்பையில் நடந்த கடைசி டெஸ்டில் 107 ரன் இலக்கை எடுக்க விடாமல் ஆஸ்திரேலியாவை நமது சுழல் சக்ரவர்த்திகள் 93 ரன்னில் சுருட்டியது ஆறுதல் அளித்தது.

2008-ம் ஆண்டு (4 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (2-0) :-

இந்த தொடரில் டெல்லியில் நடந்த 3-வது டெஸ்டுடன் இந்திய கேப்டன் கும்பிளே ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக டோனி மாறினார். இதே போல் நாக்பூரில் நடந்த 4-வது டெஸ்டுடன் சவுரவ் கங்குலியும் முழுக்கு போட்டார். இவ்விரு ஜாம்பவான்களுக்கும் இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று பரிசாக அளித்தது.

2010-ம் ஆண்டு (2 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (2-0) :-

மொகாலி, பெங்களூருவில் நடந்த இரு டெஸ்டுகளிலும் டோனி தலைமையிலான இந்திய அணி வென்று அமர்க்களப்படுத்தியது. முதல் டெஸ்டில் 216 ரன் இலக்கை 9 விக்கெட்டுகளை இழந்து எட்டிப்பிடித்ததும், 2-வது டெஸ்டில் தெண்டுல்கர் இரட்டை சதம் (214 ரன்) விளாசியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2013-ம் ஆண்டு (4 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (4-0) :-

அஸ்வின் (29 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (24 விக்கெட்) ஆகிய இரு இந்திய சுழல் சூறாவளியிடம் சிக்கி ஆஸ்திரேலியா முழுமையாக சிதைந்து போன தொடர் இது தான். 2-க்கும் மேற்பட்ட டெஸ்ட் அடங்கிய தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் (4-0) ஆக்கிய முதல் நிகழ்வு இதுவே. கேப்டன் டோனி (224 ரன்), புஜாரா (204 ரன்) ஆகியோரின் இரட்டை சதமும் முக்கிய பங்கு வகித்தன.

2017-ம் ஆண்டு (4 டெஸ்ட்) – இந்தியா வெற்றி (2-1) :-

புனேயில் நடந்த தொடக்க டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அதன் பிறகு பெங்களூரு, தர்மசாலாவில் நடந்த டெஸ்டுகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது. விக்கெட் வேட்டையில் ஜடேஜா (25 விக்கெட்), அஸ்வின் (21 விக்கெட்) டாப்-2 இடத்தை பிடித்தனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.