தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷ்ரோஃப், யோகி பாபு, மோகன்லால் போன்ற பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘ஜெயிலர்’ படத்திற்கான அறிவிப்பு வெளியானது, இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்‘ படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கப்போகும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
‘ஜெய் பீம்’ படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது, இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியினால் ரசிகர்கள் மத்தியில் இயக்குனர் ஞானவேலுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்போது இயக்குனர் ஞானவேல்-நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது, ‘ஜெய் பீம்’ படத்தை போலவே இந்த படமும் மிகவும் சக்திவாய்ந்த படமாக இருக்கும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.