'கிரானைட் கற்கள் கடத்தலை தடுங்க..!' – தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு, ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியைச் (என்னுடைய தொகுதி) சேர்ந்த கிரானைட் மாபியாக்கள், அங்கிருந்து கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து அவற்றை கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்திற்கு கடத்துவதாக தகவல் வந்துள்ளது.

ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கிரானைட் கற்களை கடத்தி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை அடைவதற்காக குறிப்பிட்ட சில வழிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. அதன்படி, ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் நதிமூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனபள்ளி வழியாகவும், சித்தூர் மாவட்டம் ஓ.என்.கொத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி வழியாகவும்; சித்தூர் மாவட்டம் மோதிய செனுவில் இருந்து வேலூர் மாவட்டம் பாச்சூர் வழியாகவும் கிரானைட் கடத்தப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஆந்திர பிரதேச கிரானைட் மாபியா கும்பலின் ஒத்துழைப்போடு இந்த குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்பது பரவலாக நம்பப்படுகிறது. எனவே, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகலை வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கும் சந்திரபாபு நாயுடு அனுப்பி உள்ளார். கிரானைட் கடத்தலை தடுத்து நிறுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதே போல ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவகர் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடு புகார் அனுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.