புதுச்சேரி: புதுச்சேரி வீடுகளில் ஏற்படும் விபத்துக்கான காரணம் என்ன என்பதனைக் கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”அமைதியின் உறைவிடமாக திகழ்ந்த புதுச்சேரியில் நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் பெருகி வருகிறது. உலகளாவிய போதைப்பொருட்களின் நடமாட்டம், வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இவற்றைக் கண்காணித்து முழுமையாக தடுக்க வேண்டிய புதுச்சேரி அரசு, நடைபெறும் சம்பவங்களை மறைப்பதில்தான் அதீத அக்கறை காட்டி வருகிறது.
பிரதமரின் வாக்குறுதியை ஏற்றுதான் புதுச்சேரி மக்கள் வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசை அமைத்துக் கொடுத்தனர். தற்போது புதுச்சேரி மக்கள் பீதியுடன் வாழ்கின்ற சூழ்நிலையை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் சில மாதத்துக்கு முன்பு ஒரு வீடு தீடீரென வெடித்தது. வீட்டின் கதவுகளும், கான்கிரீட் தூண்களும் பெயர்ந்து விழுந்தன. இந்தச் சம்பவத்துக்கு மின் கசிவு, சிலிண்டர் வெடிப்பு, வெடிபொருட்கள் பதுக்கல் என எதுவும் காரணம் இல்லை என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்து, ஒருவர் உயிரிழந்தார். இதற்கான உண்மையான காரணத்தை புதுச்சேரி அரசு வெளியிடாமல் மறைத்து விட்டது.
இந்நிலையில், புதுச்சேரி ரெயின்போ நகரில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர், மின்கசிவு என எந்த காரணமும் இன்றி பலத்த சத்தத்துடன் வீடு இடிந்துள்ளது. வீட்டின் நிலைக்கதவு முழுமையாக பெயர்ந்து விழுந்துள்ளது. வீட்டில் இருந்த ஒரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கான உண்மையான காரணத்தை காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறை உட்பட புதுச்சேரி அரசால் கண்டறிய முடியவில்லை. அடுத்தடுத்து ஏற்படும் விபத்துக்கான காரணம் தெரியாமல் புதுச்சேரி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
எனவே மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரியில் வீடுகளில் ஏற்படும் விபத்துக்கான காரணம் என்ன என கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். மத்திய அரசு நிபுணர் குழுவினர் புதுச்சேரியில் விபத்துகள் நடந்த வீடுகளில் ஆய்வு செய்து உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியையும், அச்சத்தையும் போக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.