பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது.

இதனடிப்படையில் சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள்
முதலமைச்சர் மு.கருணாநிதி
நினைவிடம் அருகே பொதுப்பணித் துறை சார்பில் ரூ.81 கோடியில்
பேனா நினைவுச் சின்னம்
அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைகிறது எனவும் மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி சிலை கட்டமைப்பை முன்மாதிரியாக கொண்டு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் தரையின் மேல் 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் தூரம் இருக்கும். இந்த பகுதிக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மெரினா கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை மீனவர்கள் தாக்கல் செய்துள்ளனர். அதில், “பேனா நினைவு சின்னம் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; கடல் வளம் பாதிக்கப்படும். கடல் வளம் பாதிக்கும் என்பதை அறிந்தும் இதற்கு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே பல சூழலியலாளர்கள் இந்த விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவித்தும் அதனை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ளவில்லை.

மேலும் சென்னை மாநகரில் நினைவிடங்கள் அமைக்க பல்வேறு இடங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் மெரினா கடலில் நினைவு சின்னம் அமைப்பது கடல் வளத்தையும், கடலின் சூழலையும் பாதிக்கும் . குறிப்பாக இது போன்ற அமைப்பை உருவாக்குவதால் அது மீனவர்களுக்கு பாதிப்பு விளைவிக்கும். எனவே இந்த நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.